பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/169

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

167


ஞானம் புன்னகை செய்கிறாள்.

“நேரமானதுக்கு நான் எப்படி மன்னிப்பது ? சாப்பிட்டாயா?” மைத்ரேயிக்கு சட்டென்று மறுமொழி கூறத் தெரியவில்லை. உண்மையில் பசி எங்கோ சாம்பற் குவியலுள் நெருப்பாக இருக்கிறது. காலையில் எட்டரை மணிக்குக் குடித்த கஞ்சிக்குப் பிறகு குடலில் ஒன்றும் விழவில்லை. அந்த சாம்பற் குவியலை ஞானம் ஊதிவிடுகிறாள்.

“போ, சாப்பிட்டு விட்டுவா. இன்னும் கொஞ்ச நேரம் வள்ளியையும் முத்தம்மாளையும் பாடச் சொல்கிறேன்...” என்று ஞானம் கூறுகிறாள்.

முத்தம்மாளும் வள்ளியும் பாடுகிறார்களா? அவர்கள் பொல பொலவென்று வசை பாடுவதில்தான் வல்லவர்கள் என்றல்லவா மைத்ரேயி நினைத்திருக்கிறாள்?

மைத்ரேயி சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் சமையற் கட்டுக்கு ஓடுகிறாள்.

அவளுடைய சாப்பாடு. புழுங்கலரிசிச் சோற்றில் ஊற்றிப் பிசைய ஒரு காரக்குழம்பு, காய்க் கூட்டென்று ஒரு உருப்புரியா மொத்தை, மோரென்று பேர் படைத்த ஒரு திரவம்.

சமையற்கட்டு துப்புரவாக இருக்கிறது. படிப்பறையில் தட்டோடு வைத்திருக்கிறாளோ சமையற்காரி முத்தம்மா?

ஓடிவந்து படிப்பறையில் சுற்றுமுற்றும் பார்க்கிறாள். இல்லை. சாப்பிடும் கூடத்துக்கே மீண்டும் வருகிறாள். மரத்தட்டு வரிசையில் அவளுடைய இருபத்து மூன்றாம் எண் தடுப்பில் அவளுடைய தட்டும் குவளையும் அவளைப் பரிதாபமாக நோக்குகின்றன.

இன்று அவள் பகல் பட்டினி. இது மைத்ரேயிக்கு முதல் தடவையல்ல. மூன்றாந் தடவை. யாரேனும் அவள் உணவை உண்டுவிடுவார்கள். சமையற்கார முத்தம்மாவே பெருந்தீனிக்காரி. அருகிலே அவளுக்குப் பெண்பிள்ளை என்று குடும்பம் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/169&oldid=1103815" இலிருந்து மீள்விக்கப்பட்டது