பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ரோஜா இதழ்கள்

நஞ்சானும் குஞ்சானுமாகச் சமையற்கட்டில் அவ்வப்போது வந்து உறவாடுவதை அவள் பார்த்திருக்கிறாள். இன்று ராசம்மா உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சலாகப் படுத்திருக்கிறாள். இனி ஐந்து மணிக்குத் தேநீர் கொடுப்பார்கள் என்ற நினைவு வருகிறது. சில விடுமுறை நாட்களில் புரை பிஸ்கோத்தும் கொடுப்பார்கள்.

பானையிலிருந்து வெறும் நீரை எடுத்துக் குடித்துவிட்டு அவள் மண்டபத்துக்கு விரைந்து வருகிறாள்.

முத்தம்மா அழகாகப் பிரலாபித்து அழுது கொண்டிருக்கிறாள். “உன்ற பூவான மொகத்திலே பொட்டிட்டு பார்க்கலியே, பொட்டிட்டு பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கலியே, மையிட்டுப் பார்க்கு முன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே, மருக்கொழுந்து சூடுமுன்னே மன்னவனார் பார்க்கு முன்னே, மாபாவியாக்கிவிட்டு மண்ணுக்குப் போனாளே.”

‘ஏ ஏ ஏ’ என்ற ஒலக்குரல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுவதும் சென்று முட்டுவது போலிருக்கிறது. ஒருவரும் சிரிக்கவில்லை. முத்தம்மா வெறும் பொழுது போக்குக்காக நாட்டுப்பாடல் என்ற பெயரில் பிரலாபித்து அழவில்லை. உண்மையில் மாண்டுபோன தன் செல்வச் சிறுமகளின் சடலத்தை மடியில் போட்டுக்கொண்டு தாயொருத்தி கரையும் துயரப் புலம்பலே அது. ஞானம்மாளின் கண் களும் கசிகின்றன. சூழலே கனக்கிறது.

முத்தம்மா சொற்களை மறந்து உண்மையில் தேம்பித் தேம்பி அழுகிறாள். அந்தத் துயர அலைகள் அங்கு அமர்ந்திருந்தவர் உள்ளங்களிலெல்லாம் சோக இழைகளை மீட்டி விட்டாற் போல் எல்லோரும் அந்தக் கனத்த சூழலைக் கலைக்க மனமில்லாதவர்களாய் ஒன்றியிருக்கின்றனர். அப்போது ஞானம் எழுந்து முத்தம்மாவிடம் வருகிறாள்.

“அழாதே முத்தம்மா. அழாதே..” என்று மெதுவாக முதுகைத் தொடுகிறாள்.

“நினைப்பு வந்திட்டது. சே...!” என்று கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/170&oldid=1100692" இலிருந்து மீள்விக்கப்பட்டது