பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

169


“உன் குழந்தையா முத்தம்மா... அழாதே... என்ன வயசு?”

“ரெண்டு வயசு அம்மா. ஆப்பூ வாங்கித் தரியான்னு கேட்டுக்கிட்டே கண்ணை மூடிச்சி.”

“சீக்கு வந்ததா?”

“பாவி பாலு வாங்கக் காசில்லாம பரதேசியாயிருந்தேன். வயித்துக் கடுப்பு வந்து செத்துப் போச்சி. பித்துப்பிடிச்ச மாதிரிப் போயி மறுக்கவிட்ட எடத்துக்கே போயிக் குழில விழுந்தேன்.”

ஒரு குழந்தை, பெண்மையின் உடல் வேட்கையைத் தூய அன்பாக மாற்றிச் சமுதாயத்தில் அவளை நோக்கும் இன்னல் களை எதிர்த்து வாழத் துணிவு கொடுக்கிறதென்ற உண்மையை அவள் விண்டுவைத்தாற் போலிருக்கிறது.

“குழந்தை...மனித குலத்துக்கு இறைவன் தந்திருக்கும் பாலுணர்வின் புனித நோக்கமே அதுதான். கணநேர நுகர்ச்சியின் விளைவைப் பெண் கட்டாயமாக ஏற்றுத்தான் சுமக்கிறாள். அந்தச் சுமையே ஒரு வகையில் அலைகடலின் கரையோரமாக அவள் அசையாது நிற்கும் நங்கூரமாக அமைகிறது. குழந்தை என்ற அந்தச் சுமை வேண்டாத பொறுப்பாக வந்து ஒட்டிக் கொண்டாலும், தாய்மை என்ற இயல்பான இனிய பாச உணர்வுகளை அது எந்த நிலையிலும் கிளர்த்தக் கூடியதாகவும் இருக்கிறது. அந்த ஈரத்தில் அவள் புனிதம் கெடாமலும் வாழ முடிகிறது. அதை இழந்ததும் அலைகடலின் கரையோரம் நிற்க நங்கூரத்தை அவள் இழந்துவிடுகிறாள்.”

ஞானம் தனக்குத் தோன்றியதைத்தான் கூறுகிறாள். பெண்கள் எல்லோரும் ‘ஆமாம், ஆமாம்’ என்று கூறுவது போல் அவளையே நோக்கியிருக்கின்றனர்.

மைத்ரேயியின் உள்ளத்திற்கு அவளுடைய கருத்து முரணாகப்படுகிறது. அப்படியானால் சந்தர்ப்ப வசத்தால் தன்னை இழந்தவள், கட்டாயமாகவேனும் வேண்டாத சுமையினால் தான் இழிவான நிலைக்குத் தன்னை ஆளாக்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/171&oldid=1100693" இலிருந்து மீள்விக்கப்பட்டது