பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

171

பொரித்தும் வறுத்தும் உணவு சமைக்கும் தாய், தன்மக்களின் நல்வாழ்வுக்கு உண்மையில் நலம் செய்யாதவள். ஆனால், அதே தாய், குழந்தைக்குப் பாலூட்டும் போது, தனக்குப் பிடித்த உணவுகளை எல்லாம் ஒதுக்கி, குழந்தையின் உடல் நலனுக்குகந்த எளிய உணவுகளை உண்ணும்போது, இயல் பான தியாகம் செய்கிறாள்...”

தியாகத்தைப் பற்றி ஞானம் மீண்டும் பேச வருவதை மைத்ரேயி ஆதரிக்கவில்லை.

“மன்னிக்கணும் மேடம். பெண்தான் தியாகம் செய் கறாள், செய்ய வேண்டும் என்று நீங்களும் கூட ஒத்துக் கொள்கிறீர்களா? காலம் காலமாகப் பெண் குலத்தைத் தியாகம் தியாகம் என்று சொல்லி அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறார்கள்...”

மைத்ரேயிக்கு தன் மனதிலுள்ள உணர்வுகளை அழகிய சொற்களாக்கும் பொறுமைகூடயில்லை. குமுறும் உணர்வுகள் இனம் புரியாமல் மோதிக் கொண்டு வருகின்றன. அவளு டைய தாய், அக்கா, மதுரம், அம்மணியம்மாள்.... எல்லோருமே சுயமாக நிமிர்ந்து நிற்க எந்தச் சந்தர்ப்பமுமே கிட்டாமல், தங்கள் சுதந்திரங்களை எந்தவகையான நன்மையுமின்றித் துன்பங்களுக்காகவே பிணித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஞானம் புன்னகை செய்கிறாள்; “உண்மைதான். நான் ஒப்புகிறேன் மைத்ரேயி, ஆனால் பெண்களின் இயல்பான பலவீனங்களே அவர்களுடைய சுதந்திரங்களைப் பிணிக் கின்றன. நகை, நல்லதுணி, வாசனைப் பொருள் என்றால் எத்தகைய அறிவாளியான பெண்ணும் மனமழிந்து போகிறாள். பெண்களை மெல்லியலார் என்று குறிப்பதே இத்தகைய பலவீனங்களை முன்னிட்டுத்தான் என்றுநான் நினைக்கிறேன். இந்த ஆசைகளே அவர்களைக் கண்களை மூடிக் கொண்டு இழிந்து செல்ல வழிகாட்டுகின்றன. இந்த மோகங்களை வெல்லாத வரையில் பெண்ணுக்கு விடுதலை உண்மை யாக இல்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/173&oldid=1100700" இலிருந்து மீள்விக்கப்பட்டது