பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

ரோஜா இதழ்கள்

வகையில் நியாயமாகும்? மீண்டும் மீண்டும் நீங்களும் பெண்ணின் மீது பழி சுமத்துகிறீர்கள்! பெண், பெண்ணாய்ப் பிறந்து தொலைந்தது என்று கல்வி மலர்ச்சியும் சமுதாய அறிவும் இல்லாத கிணற்றுத் தவளைகள் பிரலாபிக்கட்டும். நீங்களுமா பெண்ணைக் குறை சொல்கிறீர்கள்? பெண் மட்டும் அவள் விரும்பிய உணவை உண்ண, விரும்பிய பொருள்களை அநுபவிக்க, அன்புகொண்டு வாழ, இயல்பாகத் தோன்றும் ஆசைகளை அடக்கிக்கொள்ள வேண்டுமா? ஏன்? கண்விழிக்காத குஞ்சும், இயற்கையின் நியதிக்கொப்ப அதன் இனத்துக்கேற்ற ஆசையினால் உந்தப்படுகிறது. அந்த ஆசையே தவறு என்று பெண்ணின் விஷயத்தில் மட்டும் ஏன் கொட்டுகிறீர்கள்? காந்தியடிகள் சொன்னார் என்று சொல்லாதீர்கள்! அவரும் ஒரு ஆண். அவரும் தம் மனைவியை அடிமைபோல் நடத்தியிருக்கிறார், ஆமாம்!” என்று சாடுகிறாள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை அவள் அண்மையில்தான் படித்திருக்கிறாள்.

முகம் சிவக்க அவள் ஆத்திரத்துடன் கூறிய சொற்கள் சில பெண்களைக் கைகொட்டி உற்சாகமளிக்கத் தூண்டுகின்றன. ரோஸலினுக்கும் மீனாட்சிக்கும் இந்த இல்லத்திலே தாங்களே படிப்பறிவு பெறுபவர்கள் என்றிருந்த மதிப்பை அவள் கரைத்துவிட்டதால் அவளுடைய அதிகப்பிரசிங்கித் தனமான கேள்விகள் ரசிக்கக்கூடியதாக இல்லை. என்றாலும் ஞானம் மைத்ரேயியின்மீது எரிந்து விழவில்லை; சிடுசிடுக்கவில்லை. மாறாகப் புன்னகைதான் செய்கிறாள்.

“உள்ளத்தில் வைத்துக்கொள்ளாமல் துணிவுடன் நீ பேசுவதற்கு உன்னைப் பாராட்டுகிறேன், மைத்ரேயி, உன் கேள்வியிலேயே அதற்கு விடையும் இருக்கிறது. பெண்ணிடம் இயற்கை கூடுதலான பொறுப்பைச் சுமத்தி இருப்பதால் அந்தப் பொறுப்பை மீறும்போது துன்பமும் கூடுகிறது. இயல்பான ஆசைகள் நியாயமாக இருந்தாலும் சமுதாயப் பொறுப்பு பெண்ணுக்குத்தான் அதிகம். தீமைகளும் அநீதியும் இல்லை என்று நான் சொல்லவில்லை. எனினும் தீமைகளை எதிர்த்துப் போராட முதலில் நாம் தயாராக வேண்டாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/176&oldid=1100709" இலிருந்து மீள்விக்கப்பட்டது