பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

ரோஜா இதழ்கள்

காட்சி மைதானத்தில் ஒரு சிறு பகுதி தந்திருக்கின்றனர். ஆண்டுவிழா அவ்வாண்டு பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. மாறாக, வடநாட்டிலிருந்து வெற்றிக் கொடி பிடிக்கும் ஒரு இந்தி சினிமா நடிகர், இல்லத்துக்கு வரப் போவதாக செயற்குழுவிலுள்ள ஒரு உறுப்பினர் நர்மதா தெரிவிக்கிறாள். நர்மதா ஐக்கியநாடுகளின் அவையில் பொறுப்பான பணியிலிருக்கும் ஒரு ஐ.எலி. எஸ்.காரரின் புதல்வி. அவள் நகரின் பெருஞ்செல்வர்கள், சினிமா நடிக நடிகையர் எல்லாருடனும் தொடர்புகொண்டு, நன்கொடை வேண்டி அழைத்து வருவாள். அதற்காகக் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்வதற்கு முன் நிற்பாள்.

காலை பத்துமணியளவில்தான் அவருக்கு வருவதற்கு நேரம் இருக்கிறதென்றும், அவர் வந்து இல்லத்தைப் பார்வையிட்டு, சிற்றுண்டியருந்திச் செல்வாரென்றும், அப்படிச் செல்கையில் ஒரு பெரிய தொகையை நன்கொடையாக அறிவிப்பார் என்றும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கையில் மைத்ரேயி கண்காட்சிக்கான அட்டைச் சித்திரங்களைத் தயாரிப்பதிலும் எழுதுவதிலும் இரவு பகலாக ஒன்றியிருக்கிறாள். அதனால் சினிமா நடிகரைப் பற்றி அவள் சிந்திக்கவில்லை.

பிரார்த்தனைக் கூடத்தில் பங்கஜமும் புவனாவும் பெரியநாயகியும் அழகாக கோலங்களிடுகின்றனர். இல்லத்து வாயிலில் காகிதத் தோரணங்களும் தென்னங்குறுத்துத் தோரணங்களும் கட்டித் தொங்கவிடுகின்றனர். சித்திரக் கோலங்களில், நடிக வள்ளலே வருக! வருக! என்று பங்கஜம் எழுதியிருப்பதைக் கண்ட மிஸஸ் சிவநேசன் மகிழ்ந்து, இந்தியிலும் ஸ-ஸ்வாகதம்’ என்று எழுதச் சொல்லிக் கொடுக்கிறாள்.

பங்கஜத்துக்கு அவர் தன் பாட்டைக் கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கமாட்டார்களா என்ற ஆவல். தன் குரலைக் கேட்டு அந்த நடிகர் பரவசமடைவதுபோலும், அப்படியே அவள் அந்த இல்லத்து வாழ்வுக்கு முழுக்குப் போட்டுவிட்டு பம்பாய் செல்வதுபோலும் பின்னணி உலகத் தாரகையாய், லதா மங்கேஷ்கருக்கு வாரிசாக உலகெங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/178&oldid=1100621" இலிருந்து மீள்விக்கப்பட்டது