பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

ரோஜா இதழ்கள்

சாட்டமான அவள் வடிவுக்கு மாலை சரியாக இருக்கிறது. சரேலென்று ரூப்குமார்போல் நடிப்பதாக ஒரு கேலி இந்தியில் பேசிக்கொண்டு, புவனாவைக் கொஞ்சி அணைத்துக் காதல் புரிகிறாள். இல்லமே கிடுகிடுக்கும்படி குபிர்ச் சிரிப்பு ஒலிக்கிறது. ராசம்மாளும்கூட நின்றுபார்த்துச் சிரிக்கிறாள். தன் நடிப்பை ரசிக்கிறார்கள் என்று அவள் புரிந்து கொள்ளும்படி சிரிப்பும் கையொலிகளும் அதிகமாகவே, அவளுக்கும் வெறி தலைக்கேறுவதுபோல் ஆட்டவேகம் அதிகரிக்கிறது. கேலியிலிருந்து மீறி விரசத்தின் எல்லைக்குள் அவள் பேச்சும், அபிநயங்களும் வருகின்றன. சரேலென்று புவனாவை விட்டுவிட்டு, மூலையில் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்கும் மைத்ரேயியிடம் வந்து குனிந்து அவளை வேகமாக எழுப்பித் தழுவி ஒரு முத்தம் வைக்கிறாள். சொல்லொணாச் சீற்றம் கொள்ளும் மைத்ரேயி, “சீ! என்ன இது? மிருகமே!” என்று தன் கழுத்தைப் பற்றிய கையைப் பிய்த்தெறிந்து தள்ளுகிறாள். மாலை எகிற, அவள் சுவரில் மோதிக்கொள்ள விழுகிறாள்.

உடனே, சொல்லக்கூடாதென்ற வரம்புக்குள் அடைபட்டுக்கிடக்கும் கீழ்த்தரமான வசைச் சொற்கள் அனைத்தும் பொல பொலக்கின்றன.

“யேய் ! யாருடி மிருகம் ? நீயா, நானா?”

“இரு, இரு, எல்லாரிடமும் சொல்லி நான் என்ன பண்றேன் பாரு ? என்னைச் சுவரில் வச்சு மோதிறியா? உன் யோக்கியதையை நாற அடிக்கிறேன் ? அப்படிச் செய்யாட்டி நான் பங்கசு இல்ல! எலிஸ்டர் வரட்டும்! எனக்குத் தெரியும் நீ யாரைக் கைக்குள்ளாற போட்டுட்டு இவ்வளவு திமிரோட நடக்கிறேன்னு...”

மைத்ரேயி அவளுடைய பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அவளுக்கு வெறுப்பு கிளர்ந்து குமட்டிக்கொண்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக அவள் கொடி பிடிப்பாளா?... அவர்கள் சேற்றுக்குட்டையில் அழுந்தி நல்ல காற்றையும் வெளிச்சத்தையும் நுகர்ந்து அறியாதவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/180&oldid=1100626" இலிருந்து மீள்விக்கப்பட்டது