பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

ரோஜா இதழ்கள்

நிகழ்த்துகின்றனர். பங்கஜா பாட்டுப் பாட நிற்கிறாள். அவனுக்கு நேரமில்லை. இரண்டு சொற்கள் இந்தியில் நன்றியாகக் கூறிவிட்டு, இரண்டொரு குழந்தைகளின் கன்னங்களைக் கிள்ளிவிட்டு, பெரிய கும்பிடாகப் போட்டு விடைபெற்றுக் கொண்டு காரில் ஏறுகையில் மீனாட்சியும் ரோஸலினும் ‘ஸ்டைலாக’ நடந்து சென்று ‘ஆட்டோகிராஃப்’ வாங்குகின்றனர்.

அத்துடன் அமர்க்களம் முடிகிறது.

மைத்ரேயி இப்போது யாருடனும் பேசுவதில்லை.

அந்த ஞாயிற்றுக்கிழமை அவளுக்குப் பகல் நேரத்துக் கண்காட்சியில் உள்ள ஸ்டாலில் பணி இருக்கிறது.

அந்த மீட்பு இல்லத்துக் கைவினைப் பொருள்களைப் பார்க்கவோ, விவரம் அறிந்துகொள்ளவோ மக்கள் வரிசை நின்று வருவதில்லை. எவரேனும் உதிரிகளாக வருகிறார்கள். “இங்கே ஒண்ணும் இல்லே...” என்று மற்றவர்களுக்கும் சொல்லி விட்டுப் போகிறார்கள், சுவாரசியமில்லாமல். லோகாவோ மற்ற உறுப்பினர்களோ, யாரையேனும் கூட்டிக் கொண்டு வந்தால்தான் கலகலப்பு. நர்மதா யாரோ சிநேகிதிகளுடன் வந்து அமர்ந்து குளிர்பானம் அருந்திவிட்டுப் போனாள். மைத்ரேயி புத்தகமும் கையுமாக ஒரு மூலையில் அமர்ந்திருக்கையில் வாயிலில் பெரிய வரிசை நீண்டு செல்கிறது. வரிசை, பெருவழித்துறைப் பகுதிக்கோ, அல்லது மின்துறைப் பகுதிக்கோ, அல்லது நெய்வேலிப் பகுதிக்கோ தான் இருக்கும். அந்தப் பகுதிகள் வெகு தொலைவாயிற்றே? அவள் வாயிலில் நின்று வேடிக்கை பார்க்கையில் நெஞ்சு நின்றுவிடும் போன்று துடிக்கிறது. விழிகள் நிலைக்கின்றன.

சுமதி அக்கா, விச்சு, ஜக்கு; அத்திம்பேர்.

விச்சு, அவளை, அவளைப் பார்த்துவிடுகிறான்.

“அம்மா! மைத்தி சித்தி. சித்திம்மா ?...”

மைத்ரேயி விதிர்விதிர்ப்புடன் நகர்ந்து தலைகுனிந்து கொள்கையில், விச்சு ஓடிவந்து அவள் கையையே பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/182&oldid=1101209" இலிருந்து மீள்விக்கப்பட்டது