பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

ரோஜா இதழ்கள்

விடுதியில் தொட்டில் தொட்டிலாக இருக்கும் குழந்தைகளைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு. என்றேனும் அவளுக்குச் சில மணி நேரங்களுக்குக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை அநுசுயா கொடுப்பதுண்டு. அப் போது அந்தக் குழந்தைகளைத் தொட்டுத் துணி மாற்றக்கூட அவள் கூசியிருக்கிறாள். ஆனால் அக்காவுக்குப் பிறந்திருக்கும் குழந்தையை நினைத்தால் அவளுக்குத் தாபம் மேலிடுகிறது.

அன்றிரவு அவளுக்கு இரவில் படுக்கை கொள்ளவில்லை, உறக்கம் என்ன முயன்றும் வரவில்லை. ஒரு அறியாத பெண், சொல்லப் போனால் இயல்பூக்கக் கிளர்ச்சியில்தான் தன்னை இழந்தாள். அதற்கு இத்தகைய தண்டனை மிகமிகக் கொடிதென்று தன்மீதே கழுவிரக்கம் கொண்டு கண்ணீர் வடிக்கிறாள். சிறிது நேரம் அழுதபிறகு தன் மீதே அவளுக்கு வெறுப்பு மேலிடுகிறது. இல்லத்துக்கு அவள் எதற்காக வந்தாள்? படிப்புக்கு ஓர் சந்தர்ப்பத்தை நாடி. அந்த சந்தர்ப்பம் அவளுக்குக் கிடைத்திருக்கிறது. அவளுடைய இலட்சியம் தொலைவில் தெரியும் விளக்காக இருக்கிறது. அந்த விளக்கை அவள் பெற்றுக் கையிலேந்தும் வரையிலும் இருட்டில் இடறி விழாமலும் குண்டு குழிகளைக்கண்டு சோரா மலும் நிதானமாக ஒரே குறியாக அவள் நடக்கத்தான் வேண்டும். கல்வி கற்க வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற தன்னுடைய இலட்சியம் எங்கிருந்து பிறந்தது என்று தன்னையே ஆராய்ந்து கொள்கையில் சுயநம்பிக்கையுடன் தன் கால்களை ஊன்றியே எழும்பிப் பிழைக்க வேண்டும் என்ற ஆதாரத்திலிருந்து மட்டும் அது பிறக்கவில்லை என்று தெளிகிறாள். கண்ணபிரானின் வீட்டில் அடிவைத்து, அந்தப் பத்திரிகைக் குவியல்களையும், அவர்கள் பேச்சையும், குழந்தையின் மழலைஈறாக அவர்கள் தெளித்த கருத்துக் களையும் அவள் கண்டு கேட்டு உணர்ந்த பிறகுதான் அவளுக்கு உண்மை தெளியும் ஆர்வம் வளர்ந்தது.

பர்வதம் பிரசவித்துக் குழந்தை இறந்துவிட்டது. அவள் அதற்குப் பிறகு ஒரு மாசமே அங்கிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட அத்தை என்று ஒரு அம்மாள் அவளை அழைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/186&oldid=1123740" இலிருந்து மீள்விக்கப்பட்டது