பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

189

அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றெண்ணியவளாக மாடிக்கு வருகிறாள். மாடி அறைக்கதவு சாத்தினாற் போலிருக்கிறது. அவள் மெதுவாகத் தட்டுகிறாள்.

“எஸ்...” என்று டாக்டர் குரல் கொடுக்கிறாள். உள்ளே அவள் மட்டும்தான் நீண்ட மேசைக்கருகில் அமர்ந்து இருக்கிறாள்.

அந்தப் பெரிய அறைக்கு மைத்ரேயி எப்போதோ சுத்தம் செய்வதற்காகத்தான் வந்திருக்கிறாள். பளிச்சென்ற வினோலி யம் விரிப்பினால் புதுமை பெற்ற தரையில் கால் வைக்கவே கூசுகிறது. பக்கத்துக்கு எட்டாகப் பதினாறு நாற்காலிகளும் மெத்தை தைத்த வசதியான இருக்கைகள். அவ்வளவு நீளம் இல்லாது போனாலும் எட்டு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய மேசை, மெருகு குலையாமல் மின்னுகிறது. ஓரத்தில் ஒரு அலமாரி, சுவரில் வரிசையாகப் படங்கள் இருக்கின்றன.

காந்தியடிகளின் படம் பெரியது. அடுத்து நேருவின் படம், அதை அடுத்து முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த பெண்மணியின் படம்.

அவள் உள்ளே வந்ததும் டாக்டர் எழுந்து கதவைச் சாத்துகிறாள். பழச்சாற்றைக் கையில் வாங்கிக் கொண்டு டாக்டர் மித்ரா கனிவாகப் புன்னகை செய்து அவளுடைய கையை ஆதரவாகப் பற்றும் போது, மைத்ரேயிக்கு இனம் புரியாத அச்சமும் திகைப்பும் மேலிடுகின்றன. அவளுடைய மண்டையில் ஆயிரம் கேள்விகள் விஸ்வரூபம் எடுக்கின்றன. அந்த இல்லத்தில் நுழைந்தபோது, அவள் முறைப்படி ஒரு முறை மருத்துவ பரிசோதனைக்குள்ளானதுண்டு. டாக்டர் மித்ராதான் செய்தாள்.

இப்போது...

“என்ன டாக்டர்?...இப்ப மெடிக்கல் டெஸ்டா?”

“இல்ல இல்ல, நீ உக்காரு, உன்னை ஒண்ணும் செய்யப் போறதில்ல. கொஞ்சம் பேசலாம்னு...”

மறுபடியும் கனிவான நோக்கு; சிரிப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/191&oldid=1100728" இலிருந்து மீள்விக்கப்பட்டது