பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

195

மைத்ரேயி குன்றிப் போகிறாள். ஒருகால் அவளுக்கும் அவளைப் பற்றிய விவரங்களை அறிவித்திருப்பார்களோ? ஞானம்மா அவளிடம் அன்புகொண்டு பழகுவதனாலும் அந்தப் பெண்கள் பொறாமையினால் புழுங்கவில்லையா? ஒருகால் ஞானம்மா அவளிடம் அநுதாபம் கொள்வதன் காரணமே அந்த விடுதிக்கு அவள் பொருந்தாதவள் என்பதனால்தானோ? ஒரு தொழுநோய் விடுதியிலோ, காசநோய் விடுதியிலோ அவள் இணைந்திருந்தால் கூட நோய்க் கிருமிகள் உடலை மட்டுமே உண்ணக்கூடும். இந்தப் பெண்களெல்லாரும் அதைவிடக் கடுமையான மனநோய்க்கு ஆளானவர்கள். அவர்கள் அவளுடைய படிப்பார்வத்தையும் வாழ்வில் அவள் வைத்த நம்பிக்கையையும் கூடத் தகர்க்கக் கூடிய குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறார்கள். டாக்டர் மித்ரா கூறியதுபோல் நடக்குமா? கடவுளருளில் இரண்டு சிறகுகள் முளைத்துப் பறந்துபோனாள் என்று தேவதைக் கதைகளில் வருவது எங்கேனும் நிகழுமா?

அன்று மாலையில் பிரார்த்தனைக் கூடத்தில் அவள் சிறு மேசையும் விரிப்பும் போட்டுப் பூங்கொத்தும் ஊதுவத்திகளும் வைத்து ஞானத்தை வரவேற்க நிற்கவில்லை. புத்தகத்தின் மேல் தலையைக் கவிந்துகொண்டு பிரமை பிடித்தாற் போல் தோன்றும் அவளை அதுசுயா வந்தழைக்கிறாள்.

“என்ன மைத்தி? உடம்பு நலமில்லியா?”

உடம்பு என்ற சொல் செவிகளில் விழும்போதே டாக்டர் மித்ராவின் நினைவு வருகிறது. அநுசுயாவை அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

“நான் வந்தா வரேன், வராட்டி போறேன். இவங்களோட உதவாத நீதிப் பேச்சைக் கேட்டவுடன் எனக்கு மோட்ச சாம்ராஜ்யம் கிடைக்கப் போகிறதா?...” என்று கேட்கிறாள்.

“என்ன கோபம் மைத்தி? விளங்கும்படி சொல்லேன்?”

“எனக்கு ஒருத்தரிடமும் கோபமில்லை. என்னைத் தொந்தரவு செய்யவேண்டான்னா போயேன் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/197&oldid=1100743" இலிருந்து மீள்விக்கப்பட்டது