பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

ரோஜா இதழ்கள்

விட்டுச் சற்று ஒதுங்கினாற்போல் முல்லை படர்ந்த பந்தல் முகப்புடன் கூடிய ஓர் சிறு வீட்டின் சுற்று வேலிக்கதவைத் திறந்து கொண்டு ஞானம் மைத்ரேயியை, ‘வா’ என்று அழைக்கிறாள். வராந்தாவின் கீழே வரிசை கட்டினாற்போல் ஜுனியாப் பூக்கள் வண்ணங்களைக் கொட்டிச் சிரிக்கின்றன. நடுவில் ஒரு ரோஜாப் புதர். தெருவிளக்கின் வெளிச்சத்தில் வாயிலில் பதிக்கப்பெற்ற பெயர்ப் பலகை பளிச்சென்று தெரிகிறது. “மிஸ் ஆர்.எச்.ஞானம், எம். ஏ. எம். லிட், பிஎச்.டி. ஆக்ஷன் கம் ரிஸர்ச் ஸ்கீம்..” என்று அதைப் படித்துப் பார்த்தறிகிறாள் மைத்ரேயி,

முன்னறையில் நாற்காலிகளும், நடு மேசையும் பிரம்பு உருப்படிகள் தாம். ஒரு கண்ணாடி அலமாரியில் புத்தகங்கள் நிறைந்திருக்கின்றன. தென்னை மரமும், உப்பங்கழியும் படகுமாக ஒரு நீர் வண்ண ஒவியம் சுவரில் இருக்கிறது. முன்னறையின் இருபக்கங்களிலும் இரண்டு அறைகள் இருக்கின்றன. முன்னறையை அடுத்து நடுவில் சாப்பிடும் கூடம். ஒருபுறம் சமையலறை, இன்னொருபுறம் குளியலறைப் பகுதி இருக்கிறது. சாப்பிடும் அறையில் ஒரு சிறிய மடக்கு மேசை நாற்காலியும் சமையலறையில் இரண்டொரு தட்டு முட்டுச் சாமான்களும் ஒரு காற்றழுத்த ஸ்டவ்வும் இருக்கின்றன.

“எவ்வளவு அழகான வீடு, ஸிஸ்டர்! சமையல் யார் செய்வாங்க ஸிஸ்டர்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி கண்கள் ஒளிர.

“யார் சாப்பிடுகிறார்களோ, அவர்களே சமைப்பார்கள்!” என்று சிரிக்கிறாள் ஞானம்.
“நீங்களேவா, சமைப்பீர்கள் ?”
"ஏன், அது அவ்வளவு ஆச்சரியமானதா?"என்று கேட்டு விட்டு ஞானம் குளியலறைக்குச் சென்று கை கால் முகம் கழுவிக் கொண்டு, அடுப்பைப் பற்றவைக்கத் தொடங்குகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/202&oldid=1101246" இலிருந்து மீள்விக்கப்பட்டது