பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

201

“நீங்க இனிமே இதெல்லாம் செய்யக்கூடாது. நான்தான் செய்வேன்.” என்று மைத்ரேயி அவளை அச்செயலிலிருந்து விடுவிக்க முயல்கிறாள்.

ஞானம் மறுப்பதற்கில்லை. வாயிலில் மணி ஒலிக்கிறது. ஞானம் வெளியே வருகிறாள்.

“வாருங்கள், வாருங்கள் உட்காருங்கள், ஒரு நிமிஷம், இதோ வருகிறேன்” என்று அவர்களை வரவேற்கையில் மைத்ரேயி கதவின்பின் நின்று வந்தவர்களைப் பார்க்கிறாள். வடக்கு மாநிலத்துக்குரியவர்களாகத் தோன்றும் தம்பதி. உள்ளே திரும்பி ஞானம், பால், சர்க்கரை, தேயிலையைக் காட்டுகிறாள். “நாலு கப் டீ போடணும். போடுறியா...”

“ஆகட்டும், ஆகட்டும் நீங்கள் போங்கள்!”

ஞானம் திரும்பி வந்த பின்னரும், அந்தத் தம்பதி உட்காரவில்லை.

“உட்காருங்கள், உட்காரம்மா சுமித்ரா...?”

“இல்லே பஹன்ஜி, நீங்கள் வந்து சொல்லிக்கொண்டு போகவே காத்திருந்தோம்.சாமானெல்லாம் ஸ்டேஷனுக்குப் போயாச்சு...”

“நீங்கள் காலையிலேயே சொல்லிக்கொண்டு சாமான் எடுத்துக் கொண்டு போனதால் அப்படியே போயிருப்பீர்களென்று நினைத்தேன்.”

“அதெப்படிப் போவோம்? உங்களிடம் கடைசியாக வந்து சொல்லிக் கொள்ளாமல்? உங்களை மறக்கவே மாட்டோம் பஹன்ஜி? நீங்கள் ஒரு மாசம் லீவெடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் தங்கவேணும்.”

ஞானம் சிரிக்கிறாள். “கண்டிப்பாக. இவர் இங்கே படித்ததை எல்லாம் சரியாகச் செய்கிறரா, கிராம சேவையில் எவ்வளவு பெரிய வெற்றியடைகிறார் என்று பார்க்க வருவேன்...”

“ஐயையோ?” அந்த இளைஞன் பலமாகச் சிரிக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/203&oldid=1101248" இலிருந்து மீள்விக்கப்பட்டது