பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

ரோஜா இதழ்கள்


“ஏதோ நாற்பதுநாள் வேலைப்பளு இல்லாமல் சந்தோஷமாக வயல்கள் சூழ்ந்த கிராமங்களுக்கு ஜீப்பில் சென்று சுற்றினோம். சொற்பொழிவுகளைக் கேட்டதற்குப் பிறகு இளநீர் அருந்தினோம். பிறகு மாலையிலும் பேசினோம். ஆடிப்பாடிக் களித்து விருந்துகள் உண்டோம். இதற்கெல்லாம் பிரயாணப்படி தவிர, பயிற்சிக்கான படியும் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் உதவி மறக்கவே முடியாது. உங்களிடம் சொல்வதற்கென்ன? எங்களுக்குத் திருமணமாகி இரண்டு வருஷங்களானபின் இப்போதுதான் முதலாக இவளை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன். இடம் கிடைக்கும், ஹாஸ்டலுக்கு வெளியே இருக்கலாம் என்று யாரோ சொன்னதை நம்பி இவளையும் கூட்டி வந்துவிட்டு, நான் திண்டாடியபோது, நீங்கள் எங்கள் வீட்டிலேயே இருக்கலாம் என்று கூப்பிட்டு, எங்கள் சொந்த வீடாக நினைக்கச் சொன்னதை எப்படி மறப்பது?...”

மைத்ரேயி தேநீர்க் கிண்ணங்களைப் பூத்தட்டில் வைத்துக் கொண்டு வருகிறாள். ஞானம் நடுமேசையில் அதை வாங்கி வைக்கிறாள்.

“இவர் டாக்டர் ஜோஷி, இது சுமித்ரா ஜோஷி. இது மைத்ரேயி... என்னுடைய குட்டி சோதரி!” என்று ஆங்கிலத் தில் அறிமுகம் செய்து வைக்கிறாள்.

‘நமஸ்தே!” என்று மைத்ரேயிக்குக் கைகுவிக்கும் சுமித்ரா, “படிக்கிறாளா?” என்று வினவுகிறாள்.

“ஆமாம். ஹாஸ்டலில் இருந்தாள். பரீட்சை எழுதியான பின் இப்போதுதான் கூட்டி வந்தேன்.”

“நான் பார்த்தேன். ரூம் காலியானதும் இன்னும் நம்மைப் போல் யாரேனும் இடம் பிடிக்க வந்துவிட்டார் களென்று நினைத்தேன், பஹன்ஜி!” என்று ஜோஷி சிரிக்கிறார்.

“உட்கார் மைத்ரேயி...” என்று கூறிவிட்டு ஞானம் இரண்டு கிண்ணங்களை ஜோஷி தம்பதியிடம் கொடுத்து விட்டு, அவளிடம் ஒரு கிண்ணத்தைக் கொடுக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/204&oldid=1099931" இலிருந்து மீள்விக்கப்பட்டது