பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

203

தேநீரருந்திவிட்டு அவர்கள் விடைபெற்றுச் செல்வதைப் பார்த்துக் கொண்டே மைத்ரேயி நிற்கிறாள். சரளமாகப் பழகுபவளாக இருந்தாலும், ஞானம் எங்கோ கோபுரத்திலும் தான் மூன்றாம்படியிலும் நிற்பதாகத் தோன்றுகிறது. டாக்டர். இங்கே டாக்டர்கள். இவளும் டாக்டர் மி த்ராவைப்போல் ஏதேனும் அறியத்தான் கூட்டி வந்திருப்பாளோ என்று அச்சம் அறியாமையின் கிளர்ச்சியாய்ப் படருகிறது. அவளுடைய சரளபாவம் மடிந்து, அவளை ஒதுங்கி நிற்கச் செய்கிறது. அவள் தேநீரைத் தொடவில்லை. ஞானம் அவ்வளவு படிப்புப் படித்தவள். அவளை எத்தனை பத்திரங்களிலோ கையெழுத்துப் போட்டு எதற்காகச் சுவீகரித்துக் கொள்ளவேண்டும்? அறியாமையின் விளைவுகளாகவே அவளுடைய ஒவ்வொரு திருப்பமும் பலன் கொடுத்திருக்கின்றன. அப்படி இதுவும் என்ன மர்மமோ? அவர்களை வாயில் வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு வரும் ஞானம், தேநீரைப் பருகாமல் இருண்ட முகத்துடன் மைத்ரேயி நிற்பதைக் கூர்ந்து கவனிக்கிறாள்.

“ஏன், என்ன விஷயம் மைத்ரேயி? ஏன் வருத்தமாய் இருக்கே?”

“இல்லே...நீங்கள், இவ்வளவு பெரியவர், என்னை எதற்காக சகோதரின்னு சொல்லி ஒட்டிக் கொள்ள வேணும்னு நினைச்சேன்.”

“ஒ...? அது அவ்வளவு பெரிய வருத்தமான விஷயமா? நான் ஏன் கூட்டிக்கொண்டு வந்தேன்?...” என்று அவள் கையைப் பற்றித் தன் நெஞ்சில் வைத்துக்கொள்கிறாள் ஞானம்.

“என்னைப் போல் நீ, உன்னைப் போல் நான நீ ஒரு அநாதை, நான் ஒரு அநாதை. போதாதா? எனக்கு உன்னை அந்த ஹோமில் வந்து பார்த்துத்தான் தெரியும் என்று நீ நினைத்திருப்பாய், இல்லே?”

மைத்ரேயியின் விழிகள் அகலுகின்றன.
“பின்னே ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/205&oldid=1101250" இலிருந்து மீள்விக்கப்பட்டது