பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

ரோஜா இதழ்கள்

“சாவடிக்குப்பத்தின் ஹைஸ்கூலுக்குப்பின் உள்ள பனங்காட்டின் நடுவே ஒரு வீட்டில் நீ குடித்தனம் செய்ய வந்த நாளிலிருந்தே உன்னைக் கவனித்திருக்கிறேன். அந்த வழியாகக் கீழங்குப்பம், மேலச்சேரி கிராமங்களுக்கு நான் இந்த டாக்டர்களுடன் போயிருக்கிறேன்; அதெல்லாம் ரிஸர்ச் ஸ்கீமில் வருகிறது.”

“அங்கெல்லாம் நீங்கள் போவீர்களா? மேலச்சேரி பக்கத்தில் தானே ? அங்கேயிருந்து லட்சுமி வருவாள். அந்த கிராமங்களுக்கு நீங்க போயிருக்கிறீர்களா? அங்கே போய் என்ன செய்வீர்கள் ?”

“என்ன செய்வோம், செய்தோம் எல்லாம் ஒண்ணுமே யாருக்கும் இன்னமும் புரியவில்லை. எனக்கு அவர்களுடைய அறியாமையைப் போக்கி மனத்தளவில் மேல்மட்டத்துக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பு. காந்திய இந்திய தத்துவ இயல், உளவியல் கிராம மறுமலர்ச்சித் திட்டங்களைப் பற்றிய அறிவு எல்லாம் படித்துப் படித்து வறண்டுபோனபின் இதற்குத் தான் லாயக்கென்று நானும் வந்தேன். அவர்களும் சுளையாய் எட்டு நூறு சம்பளம் கொடுக்கிறார்கள். ஆனால் நீ கேட்டாற்போல என்ன பண்ணினர்களென்று கேட்டால் ஒரு பலனும் தெரியவில்லை.”

“ஏன் ?”

‘ஏன் என்றால்? சற்றுமுன் ஜோஷி சொல்லிவிட்டுப் போனான். அந்தக் காலத்தில் நம் கிராமப்புறங்களில் எங்கோ வயல் வெளிகளுக்குச் சென்று காலைக் கடன்களை முடித்தார்கள். காந்திஜியின் முறை அப்படி நாட்டுப்புறங்கள் விரிந்து கிடந்த காலத்துக்குப் பொருந்தும். இன்று நேருஜியின் புண்ணியத்தில் கிராமங்கள் நகரத்துப் பெருக்கத்துக்கு இரைபோட தன் சொத்து சுகங்களை எல்லாம் வழங்கிவிட்டு, கூன், குருடு, கிழம், பழம், ஏழை எளியதென்று மிஞ்சியிருக்கின்றன. அவர்களுக்கும் நகரத்துச் சுகங்களைக் கொடுக்க, திட்டங்களைப் போட்டு பட்டி தொட்டிகளிலெல்லாம் சாலைகளும் அலுமினியப் பூச்சுக் கம்பங்களும் கம்பிகளும் கொண்டு வந்துவிட்டார்கள். பிறகு என்ன இருக்கிறது ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/206&oldid=1099934" இலிருந்து மீள்விக்கப்பட்டது