பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

ரோஜா இதழ்கள்

தலைவேதனைப் பிரசங்கங்களை ஒவ்வொரு குழுவுக்கும் கொடுக்கிறேன்; சம்பளம் வாங்குகிறேன். இப்போது, ஒவ்வொரு சமயம், இந்தியாவே யாரோ சிருஷ்டித்து கனவுலகில் மிதப்பது போல் எனக்குப்படுகிறது.”

பள்ளியில் ஐந்தாண்டுத் திட்டங்களைப் பற்றிய கட்டுரை எழுதி அதன் பயன்களை வானளாவ விவரித்த மைத்ரேயிக்கு இந்த நேர்மாறான கருத்தை ஒப்புக்கொள்வதற்குத் துணிவில்லை. “அப்படியானால் கிராமங்களுக்குச் சாலை வேண்டாமா? மின்சாரம் வேண்டாமா ? ஐந்தாண்டுத் திட்டங்கள் நல்ல திட்டங்களல்லவா ?”

“அப்படிச் சொல்லவில்லை. ஆனால் நகரத்தைப்போல் கிராமத்தை ஆக்குவது சரியாக இல்லை. கிராமங்கள் இந் நாட்டின் உயிர் நாடிகள்; இந்நாட்டின் தனித்தன்மையை அங்கேதான் காணமுடியும். கிராமத்தில் குளத்தைக் குப்பையைக் கொட்டித் தூர்த்து, அங்கு ஒரு வானொலிக் கம்பத்தை நட்டு, இரண்டு துருக்க சாமந்திச் செடியைப் பயிராக்கிவிட்டு, நேரு பூங்கா, காந்திபூங்கா, அல்லது அந்த ஊர்ப் பெரிய மனிதன் பேரில் பூங்கா என்றால் நன்றாக இருக்கிறதா? பக்கத்துக்குப் பக்கம் டீக்கடை, சினிமா, சற்றும் நான மில்லாமல் பொது இடங்களை அசுத்தமாக்குதல் எல்லாம் நகர நாகரிகத்தின் சின்னங்கள். யாரோ ஒரு தமிழ் எழுத் தாளர் இந்த முன்னேற்றத்தைப்பற்றி இப்படி ஒப்பிட்டிருந்தார். கைம்பெண்ணொருத்தி, தலைசீவி, மெல்லிய ரவிக்கை உட்கச்சுத் தெரிய அணிந்து, பாவாடை புடவை உடுத்தி, கொண்டையிட்டுக்கொண்டு வாத்தியாரம்மா வேலைக்குப் போனாற்போல் என்று எழுதியிருந்தார். நான் வெகுநேரம் ரசித்துச் சிரித்தேன்...”

மைத்ரேயி பேச்சற்று நிற்கிறாள்.

“இந்தத் திட்டம் செயல்முறைக்குச் சரியில்லை; ஒத்து வராது என்று எழுதிவிடலாம். ஆனால் பொறுப்பேற்றிருப்பவர்கள், தனி பங்களா, கார், கொழுத்த சம்பளம் இதெல்லாம் அநுபவிக்க இன்னொரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/208&oldid=1099937" இலிருந்து மீள்விக்கப்பட்டது