பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

ரோஜா இதழ்கள்

சுவை தெரியாதவண்ணம் கெடுத்துக்கொண்ட கதை என்னுடையது. பெண் தனித்து நின்று நல்மதிப்பைப் பெற்று வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் நீங்கள் எப்படி என்னைப் போலாவீர்கள்!”

ஞானம் சற்றே திடுக்கிட்டாற்போல் மைத்ரேயியின் கையைப்பற்றி மெல்ல அழுத்துகிறாள். சில விநாடிகள் அவளுக்குப் பேச்சே எழவில்லை.

‘நீ என்ன கேட்கிறாயென்று எனக்குப் புரிகிறது. பெண்ணே நான் தனித்து நிற்கிறேன் என்றால் அப்படி இயற்கையாகவே நின்றுவிடவில்லை. நான் ஒன்று சொல்லுகிறேன், கேட்டுக்கொள், இந்த உலகில் எனக்குத் தெரிந்தவரை எந்த நாட்டிலும் ஒரு பெண்ணை போகத்துக்குரியவள் என்ற வரையை மறந்து அவளுடைய அறிவுக்காக, குணநலன்களுக்காக, திறமைக்காகச் சந்தர்ப்பங்களை கொடுத்து மதிப்பதாகத் தெரியவில்லை. அவளும் முன்னுக்கு வரட்டும் என்று பெண்ணின் பெருமையைப் பற்றிப் பேசுபவர்கள்கூட, ‘ஏதோ, பாவம் அவளும் வந்துவிட்டுப் போகட்டும்’ என்று தரும இரக்கப்பரிவோடு சொன்னாலும் தங்களுக்குப் போட்டியாக வந்துவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்து கொள்கிறார்கள். நான் கல்லூரியில் படித்த காலத்திலும் அரசியலில் புகுந்த காலத்திலும் என்னை விரும்பி அதாவது மணம் புரிந்துகொள்வதாகச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் சிலர் இருந்தார்கள். ஒரு இளைஞனை நானும் அந்த நாட்களில் விரும்பியிருந்தேன். ஆனால் என் மனசு தன் கருத்தை அவன் பால் சொல்லவிடுமுன் அவனுக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்றறிந்தேன். என் பேச்சையும் அறிவுத் திறனையும் அவன் புகழ்ந்து போற்றியதெல்லாம் இந்த உடலுக்காகத்தான் என்ற உண்மை எனக்கு மிகவும் பயங்கரமானதாக, வெறுக்கத்தக்கதாகத் தோன்றியது. பெயர் கூற விரும்பவில்லை. இப்போது அவன் ஒரு கண்ணியமான பதவியில் இருக்கிறான். அவன் அற நெறிச் சொற்பொழிவுகளாற்றுவதாகக் கொட்டை எழுத்துப் போஸ்டர் ஒன்று அன்று தெரிவித்தது. இந்தச் சமுதாயத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/212&oldid=1099942" இலிருந்து மீள்விக்கப்பட்டது