பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216

ரோஜா இதழ்கள்

கொண்டு உச்சரிப்பதும் தன் தனித் தன்மையைப் பறை சாற்றக் கூடியவை என்று எண்ணும் மனிதர். ராமசேஷன் மட்டுமல்ல. அங்கு அவள் பழகும் முக்கால்வாசி ‘ஃபாரின் ரிடர்ன்டு'களும் அப்படித்தான் எண்ணிக் கொள்கிறார்கள். வெளி நாட்டு விருந்தினர் கலந்து கொள்ளும் விருந்துகள் என்றால் அவர்களுக்குத் தலைகால் புரியாது. விடாமல் புகை குடிப்பதைச் சிலர் பெருமைக்குரிய பழக்கமாகக் கருதுகிறார்கள். ஆனால் அவர்களுடைய மனைவியரோ, வெளிக்கு ஆங்கிலம் பேசி, விருந்து நாகரிகங்களில் கலந்து கொண்டாலும் அடிப்படையிலிருந்து முற்றிலும் மாறாதவர்கள் என்று பல சமயங்களிலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

ராமசேஷனின் மனைவி ஜானகி, மெட்டியும் உச்சிப் பொட்டுமாக விளங்குகிறாள். தாய்மொழியில்தான் பேசுகிறாள். அவள் கல்லூரியில் பட்டம் பெற்று, சில மாதங்கள் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகவும் வேலை செய்தவள் தான். ‘கல்யாணமாகாம இருக்கும்போது ஒரு வேலை வேண்டுமே என்றுதான் படித்தேன். டாக்டர் சைனிஸ் அக்ரேஷன்போது எமர்ஜன்ஸி கமிஷனில் சேர்ந்துவிட்டு, பிறகு தானே இங்கு வந்தார்! வரதட்சிணை ரொம்பக் கேட்கல. அதனால் எங்கம்மாவால் சமாளிக்க முடிந்தது. எனக்கும் அவருக்கும் பன்னிரண்டு வயசு வித்யாசம். அதனால் என்ன? நாங்கள் சந்தோஷமாகத்தானிருக்கிறோம்.” என்று சொல்கிறாள். “லிஸ்டர்! எங்க சிவு பூணுரல் போட்டிருக்கிறான் பாருங்கோ?” என்று வடை பாயசத்தோடு மூன்று வயசுப்பையனையும் கையில் பிடித்துக் கொண்டுவந்து வியப்பில் ஆழ்த்துகிறாள். மைத்ரேயி அந்தக் குழந்தையைக் கண்டால் விடமாட்டாள். “அக்கா, ஜானகி ஆவணி அவிட்டம் கொண்டாடியிருக்கிறாள் பார்த்தீர்களா? அந்த மனிதர் புகைபிடித்துக் கொண்டு சாலையில் ஜீப்பில் போகிறார்” என்று சிரித்தாள். “ஏன், எதற்கு’ என்று கேட்கக் கூடிய அறிவு மலர்ச்சி இருந்தும், அப்படிக் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டு சில வழக்கங்களைப் பின்பற்றுவதில் அவர்கள் அமைதி காண்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/218&oldid=1101271" இலிருந்து மீள்விக்கப்பட்டது