பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228

ரோஜா இதழ்கள்

"காங்கிரஸ் கட்சி தோல்வியடையுமாயின் அதற்காக நான் மிகவும் வருந்துவேன். ஆனால் அவர்கள் பதினைந்து வருட ஆட்சிக் காலத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்றுவதற்கில்லாமல் தவறிவிட்டார்கள். திட்டங்கள் வெற்றி என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் எந்த அளவில் பணக்காரன் பணத்தைக் குவித்துக் கொண்டே போகிறான்; விலைவாசிகள் எட்டிப் பிடிக்க இயலாமல் ஏறுகின்றன. ஏழைகள் இன்னும் பெருகிக் கொண்டிருக்கின்றனர்” என்று கூறுகிறாள் ஞானம்.

“ஒப்புக்கொள்கிறேன். என்றாலும் காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு நன்மை நினைக்கும் ஒரே கட்சி. அது தியாகத்திலும் கண்ணிரிலும் உருவானது. துவேஷப் பிரசாரத்தில் உருவானதல்ல. இதற்கு ஒரு நல்ல வரலாறு உண்டு. நீங்கள் என்ன அடுக்குமொழிப் பந்தல் போட்டாலும் சுதந்திரம், நேரு, காந்தி, காங்கிரஸ் என்ற தொடர்தான் எழுமே ஒழிய சுதந்திரம் அண்ணா என்று எழுத முடியுமா ?”

“சுதந்திரத்தைப்பற்றி இப்போது யார் நினைக்கிறார்கள்? அரிசி விலை என்னாச்சி? பருப்பு விலைஎன்னாச்சி? கட்டை விலை என்னாச்சி ? என்று மந்திரி அண்ணாச்சிகளைக் கூப்பிட்டுக் கேட்டுக் கோஷம் போட்டால் மக்கள் மனமிரங்கி நிற்கின்றனர். அரசியல் அந்த லெவலில்தான் இருக்கிறது.”

“சுலோகம், சினிமா, பாட்டு இது தொற்றுநோய் போலப் பிடித்திருக்கிறது.”

மைத்ரேயி இந்நேரம்வரை வாய் திறக்கவில்லை. பளீரென்று அவளுடைய குரல் எழும்புகிறது. “அப்படி ஒன்றும் நீங்கள் எளிதாக நினைத்துவிட வேண்டாம். ஆணிவேரிலிருந்து திட்டமிட்டு அவர்கள் தங்கள் கருத்துக்களை ஏற்கச் செய்கின்றனர். எனக்குத் தெரிந்து, தமிழ் படித்த வித்வான்களெல்லாரும் அவர்களுடைய ஆதரவாளர்தாம். நான் ஆறாவது படிக்கும் நாளில் கட்டுரை நோட்டில் உபாத்தியாயர் என்று எழுதினால் அந்தப் பதத்தை அடித்துத் தப்பாகக் கணக்கிட்டு மார்க்கைக் குறைப்பார்கள். ஏன்? அது சமஸ்கிருதம், ஆரியர்களின் மொழி. ஆசிரியர் என்று திருத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/230&oldid=1100124" இலிருந்து மீள்விக்கப்பட்டது