பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

ரோஜா இதழ்கள்

யாசமும் இல்லை. இம்மாதிரியான போலிப் பிராமணருக்கு போலித் தொழில் புதிய பாடசாலை என்று சொல்லப்படும் கல்விக்கூடங்களில் அறிவு மங்கிய குழந்தைகளோ, வயிற்றுக்கு வழியில்லாத கீழ்மட்டக் குழந்தைகளோ, பொருள் புரியாமல், மொழி புரியாமல் தப்பும் தவறுமாக வேதங்களை உச்சரிக்க, அத்யயனம் செய்ய வருகிறார்கள். இந்தத் தொழில் இன்று சமுதாயத்தில் எந்த அளவுக்கு இழிந்து போயிருக்கிறதென்பதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. இந்தச் சாதி பிழைத்துத் தளிர்த்துப் புது வாழ்வு காணவேண்டும்என்று நான் கொஞ்சமும் எண்ணவில்லை. இன்றைய யுகத்தில் ஒரு சிலராலும்கூட நேர்மையாகப் பிழைக்க இயலாத ஓர் வாழ்க்கை முறையை எதற்காக வளர்க்கவேண்டும்? இந்தச் சாதி முகமில்லாமல் அழிந்து வேறு வண்ணங்களில் கலக்க வேண்டும்...”

“அது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை. மற்ற நாடுகளில் ஒருகால் இம்மாதிரியான சமுதாய மாற்றங் கள் எளிதாக இருக்கலாம். வயிற்றுக்கில்லாது வறுமையிலும் உயிரோடிருந்த காலமெல்லாம் வெறுத்த முதியோருக்குச் சிரார்த்தம் செய்யவேண்டும் என்பதை மறுக்காத சமுதாயம் இது. கல்வியறிவும் மறுமலர்ச்சியும் பெற்றும், ஜானகி போன்ற பெண்கள் கண்மூடித்தனமாகச் சம்பிரதாயங்களை மட்டும் காப்பாற்றுகிறார்கள். பொருள் நிலை குறைந்த மட்டத்தில் தான் மூடநம்பிக்கை என்பதில்லை. உயர்மட்டத்தில் சாஸ்திரிகளை மாசச் சம்பளத்துக்கு அமர்த்திக் கொண்டோ, அள்ளிக் கொடுத்தோ, ஒட்டிய பாவத்தைக் கரைத்து விடலாம் என்று பொருளற்று உளுத்துப் போன சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கின்றனர். உள்ளுற வேரோடியிருக்கும் நம்பிக்கையைக் களைந்தெறிய முடியாததாலேயே அந்த வாழ்க்கை முறையிலிருந்து நழுவினாலும் சம்பிரதாயங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்? வெளிப்படையாகத் துாற்றினாலும் உள்ளுற அஞ்சி, முதல் நாளே ஐயரை வரவழைத்து, மஞ்சட் பிள்ளையாரைப் பிடித்து வைத்துப் பூசை செய்து தாலிகட்டி மெட்டி போட்டு முறையான திருமணத்தை முடித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/238&oldid=1123762" இலிருந்து மீள்விக்கப்பட்டது