பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

241

கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டு வந்து வயிறு வளர்க்கத் தொழில் செய்வார்கள். இந்த ‘பிராமணத்துவம்’ சாக வேண்டும் என்று ஞானம்மா சொன்னதில் என்ன தப்பு ?

கருஞ் சந்தைக்காரனும் சூதாடியும் உடலை விற்றுப் பிழைப்போரும் இன்னும் இழி செயல் செய்பவரும் மலிந்த இவ்வுலகில், அவர்களெல்லாரும் கடைத்தேறப் பாதபூஜைகள் செய்யும்போது, மதுரத்தைப் போன்ற பெண்கள் முடி வைத்துக் கொள்வதனால் தானா இந்து மதம் சீரழிந்து குலைந்து நசித்துப் போய்விடப் போகிறது?

அவள் எம்.ஏ. படித்து வரலாற்று ஆராய்ச்சி பண்ணி யாருக்கு என்ன செய்யப்போகிறாள்? சருகுகளாய் உலர்ந்து விழும் கூளத்துக்கு நீர்வார்த்து அழுகச் செய்வதைவிட ஒதுக்கித் தள்ளிவிட்டுப் புதிய வித்துக்களை ஊன்றுவதுதான் உகந்தசெயல். வறுமையைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் மதத்துக்கு இழுக்கிறார்கள் என்று வேறு மதப் பிரசாரகர்களைக் குறை சொல்வதுண்டு. மானபங்கம் செய்வது போன்று ஒரு பெண்ணின் முடியைப் பறித்து சமுதாயத்தின் கண்களுக்கு அவளை ஒரு குற்றவாளியைப்போல் நிறுத்து வதற்கும் வறுமையே காரணமாக இருக்கிறது. இந்த வறுமையை நிபந்தனையில்லாமல் ஒழிக்க வேண்டும். புத்தகங் களை உதறி எறிந்துவிட்டு எங்கேனும் சமையல் வேலை யேனும் செய்து மதுரத்தின் குடும்பத்தைக் காப்பாற்றுவது தன் கடமை என்று அவளுக்கு அப்போதே தோன்றுகிறது. தப்பும் தவறுமாய் உளம் ஒன்றாமல் வேதம் ஓதியது போதும் என்று அந்தப் பிள்ளைகளை அழைத்து வந்து ஏதேனும் தொழிற் கல்வி கற்பித்து வாழும் வகை செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணுகிறாள். சேரிகளுக்குள் அழுத்தக் கூடிய வறுமைக்கும் உயர் சாதியினர் நடத்தும் வாழ்வு முறைக்கும் இடையே போராட முடியாமல் போலியாகவும் சருகாகவும் உலர்ந்து மாறும் மக்களை எல்லாம் கூனலில் இருந்து மீட்டு உண்மையான வாழ்வு வாழ வகை செய்வதை அவளுடைய இலட்சியமாகக் கொள்ளவேண்டும்....

ரோ.இ - 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/243&oldid=1101583" இலிருந்து மீள்விக்கப்பட்டது