பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

243

வந்துவிட்டாளா? அவளுக்கு உடல்நலக் குறைவென்று வந்து ப, சந்தர்ப்பங்கள் கூட மிக மிகக் குறைவு. ஒரு முறை ஃப்ளூகாய்ச்சல் வந்தது. அவளுக்கு தெரிந்து ஞானம் வந்தாற்போல் மூன்று நாட்கள் அப்போதுதான் படுத்திருந்தாள்.

மைத்ரேயி வீட்டுக்குள் நுழைந்தபோது ஞானம் உடல்நலமின்றிப் படுக்கையை விரித்துப் படுத்திருக்கவில்லை. மாறாக உள்ளே சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருக்கிறாள். ஏலக்காயும் நெய்யும் மணக்கின்றன.

சாப்பிடும் கூடத்து மேசைமீது புதிய ஜினியாப் பூங் கொத்து ஒன்று பறித்துச் செருகி வைத்திருக்கும் மலர்க் குடுவை.

“என்னக்கா?” என்று அவள் சமையலறையை எட்டிப் பார்க்கிறாள்.

ஸ்டவ்வில் அல்வா கிளறும் ஞானம் அருகில் வடைக்கு வேறு அரைத்து வைத்திருக்கிறாள்.

“என்னக்கா? யாருக்கு பார்ட்டி, இன்னிக்கு ? என்னிடம் முன்பே சொல்லி இருந்தால் இன்னும் ஒரு மணி முன்னதாக வந்திருப்பேனே.”

‘உன்னிடம் அப்போதே சொல்ல எனக்கே தெரியாதே?”

“விடுங்கள், நான் கிளறுகிறேன். நீங்கள் முகத்தைத் துடைத்துக் கொண்டு போங்கள். எத்தனை பேர் அக்கா?” “யாருமில்லே, எதிர்வீட்டு ராமசேஷனும் ஜானகியும் வருகிறார்கள்.”

“இன்னிக்கு அவங்களுக்கு வெட்டிங் டேயா? நீங்க பார்ட்டி குடுக்கிறீங்களா அக்கா?”

ஞானம் மைத்ரேயியைக் குறும்புச் சிரிப்புடன் திரும்பிப் பார்க்கிறாள்.

“அவளோட அவர் ஃபிரன்ட், ஒரு I.M.S. டாக்டர் பையன் வந்திருக்கிறான். இங்கே அழைத்து வரேன்னா. சரி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/245&oldid=1100459" இலிருந்து மீள்விக்கப்பட்டது