பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

ரோஜா இதழ்கள்

முன்னேறி மறுமலர்ச்சி வேடம் பூண்டாலும் அடித்தளத்திலுள்ள பச்சையான இயல்புகள் சமயங்களில் மீறி வரு வதாக மைத்ரேயி நினைக்கிறாள். ஞானம்மா, அவள் பெரிதும் மதித்து வியந்து அன்பு கொண்டு ஆராதித்த ஞானம்மா, அவளுக்கு ஒரு சோதரியாக, ஆசிரியையாக, தோழியாக நின்றிருப்பவள் இப்போது மூடத்தாயாக உருக் கொண்டிருக்கிறாள். அவளால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.

அப்போது ஞானம் உள்ளே வருகிறாள்.

“காபிக்குப் பால் காய்ந்து விட்டதா? நீயும் வா...” என்று கூறிவிட்டு, தட்டுக்களில் இனிப்பையும் காரத்தையும் வைக்கையில் ஜானகியும் உள்ளே வருகிறாள்.

“மைத்ரேயி காலேஜிலிருந்து வரவில்லையாக்குமென்று நினைச்சேனே? ஓ ! இதெல்லாம் என்ன ஸிஸ்டர்? பெரிய அமர்க்களம் பண்ணி இருக்கிறீர்கள்?”

“ஒண்ணுமில்லே. உங்க வீட்டிலிருந்து மாசம் அஞ்சு நாள் பாயசமும் பட்சணமும் கொண்டு வந்து தருகிறாய். இதையும் ருசித்துப் பாருங்கள்.”

“ஆமாம். அக்காவே செய்தது.”
தட்டுக்களையும் தண்ணிர்க் கூஜாவையும் அவளும் மைத்ரேயியும் கொண்டு வருகிறார்கள்.

நல்ல உயரமும் பருமனுமாக கம்பீரமான தோற்றத்துடன் விளங்கும் முரளி பெண்களிடையே கூசினாற்போல் தோன்றுகிறான். பெண்களின் சங்கத்தில் இயல்பாகப் பழகக் கூடியவனல்ல என்று புரிகிறது.

“மைத்ரேயி...” என்று ஜானகி கூறுகிறாள்.
“டாக்டர் முரளி...”
புன்னகை, கைகுவிப்பு. அவனுடைய முகத்தில் வியப்பு.

“...நான்...நீங்கள் பாபுச் சித்திக்கு உறவு இல்லையா?” என்று நேராகக் கேட்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/252&oldid=1100476" இலிருந்து மீள்விக்கப்பட்டது