பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

251

மைத்ரேயிக்குத் தன் உடல் குளிர்ந்து கரைவதுபோல் தோன்றுகிறது.

பாபுச் சித்தி....அத்திம்பேரின் பெரியப்பா பெண் பாபு... அவளுக்கு...

“சரிதானா? நான் உங்கள் வீட்டுக்கு ஒருநாளைக்கு வந்தேன் நினைவிருக்கா ?”

“நினைவிருக்கிறது” என்று தலையை ஆட்டுகிறாள் மைத்ரேயி. பாபுவின் கணவருக்கு டில்லியில்தான் வேலை. பாபுவின் பெரிய மகள் மைத்ரேயியைவிடப் பெரியவள். அந்த லோச்சுவும் மீனாவும் மாம்பாக்கம் வந்தால் அவளை வேலைக்காரிபோல் நினைப்பார்கள். அவர்களுக்கு அவள் தட்டலம்பி வைத்து, மருதோன்றி அரைத்துக்கொடுக்கும் போது மட்டும்தான் சிநேகம். ஊருக்குப் போகும்போது, அந்த பாபு, அவள் கையில் நாலணாவோ, எட்டனாவோ கொடுப்பாள். அதை அவள் முகத்திலேயே விட்டெறியத் தோன்றும். அக்காவுக்கு அஞ்சி அதை வாங்கிக் கொண்டி ருக்கிறாள். அவளுடைய மைத்துனர் பிள்ளையான இந்த முரளி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு முறை அவன் தீபாவளி சமயம் அங்கு வரப் போகிறான் என்று அக்காவே தடபுடலாக ஏற்பாடுகள் செய்து எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் தீபாவளியன்று வர வில்லை. அடுத்த நாள் பிற்பகல் எல்லாரும் பகற்காட்சிக்குச் சென்றிருந்த நேரத்தில் வந்தான். அவள் தீபாவளி பட்சணத்தை ஒரு தட்டில் வைத்துக் கொடுத்து விட்டு, வீட்டுக் கப்பால் வயலில் நின்றிருந்த அத்திம்பேரை அழைத்து வந் தாள். ஒலையை எரியவிட்டு அத்திம்பேருக்கும் அவனுக்கும் காபி தயாரித்துக் கொடுத்தாள்.

அவன் அவளை இனம் புரிந்துகொண்டது அவளுக்கு நன்மையாகவே இருக்கிறது. மனம் இறுக்கம் விடுபட்டு இலேசாகிறது.

“முன்பே தெரியுமா என்ன ?’"என்று வினவுகிறார் ராமசேஷன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/253&oldid=1101314" இலிருந்து மீள்விக்கப்பட்டது