பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

ரோஜா இதழ்கள்

“உலகம் மிகவும் சிறிது” என்று நகைக்கிறாள் ஜானகி. “அந்தத் தோட்ட வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போதுகூட அங்கே போக வேண்டும் என்று ஆசை.”

முரளி மிகவும் பண்புடையவனாக இருக்கிறான். ஞானம் எப்படி உறவு என்று கேட்கவில்லை. அவனுக்கு அவளைப் பற்றிய செய்தி நிச்சயமாக எட்டி இருக்கும் என்று மைத்ரேயி நினைக்கிறாள். ஏனெனில் இத்தகைய செய்திகள் காட்டுத்தீ போல் பரவுவது சகஜம்.

‘இது என்ன அல்வா?” என்று நல்லவேளையாக ராமசேஷன் பேச்சுப் போக்கை மாற்றுகிறார்.

“கண்டுபிடித்துச் சொல்லுங்கள்!” என்று ஜானகி சிரிக்கிறாள்.

“கோதுமையா?”
முரளி புன்னகையுடன் அல்வாவைத் தொடாமலே பரிசீலனை செய்கிறான். மைத்ரேயி கோதுமை அல்வா என்று தான் நினைக்கிறாள். என்றாலும் கூர்ந்து நோக்குகையில், ஜானகி, “மைதாமா, உருளைக்கிழங்கு ஏதானும் இருக்கலாம். ஏன் ஸிஸ்டர்?’ என்று கேட்கிறாள்.
“அந்த மூன்றும் இல்லை.”
“பரவாயில்லையே? இது ஏதோ, நம் பெண் எதைச் சமைத்துப் போட்டாலும் சாப்பிடுவானா ருசி தெரியாமல் என்று பார்க்கவரும் மாப்பிள்ளைக்கு மாமியார் பரீட்சை வைப்பது போலிருக்கே?” என்று ஜானகி கேலியாகச் சிரிக்கிறாள்.

“உங்கம்மா அப்படிப் பரீட்சை வைக்கிறாளென்று தெரியாமல் தான் நான் மாட்டிக் கொண்டேன்” என்று ராமசேஷனும் அவள் நகைப்பில் இணைந்து கொள்கிறார். ‘

“இதுபறங்கிக்காய். சரிதானா?” என்று கேட்கிறான் முரளி.

ஞானம் ‘சரி என்று ஒப்புக்கொள்கிறாள்.
“சாப்பிடாமலே எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/254&oldid=1101317" இலிருந்து மீள்விக்கப்பட்டது