பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

ரோஜா இதழ்கள்

ஓட்டுவானேன்? அங்கு மருந்து இல்லை; இவர் தொழிலுக்கு வேண்டிய உபகரணங்கள் இல்லை. ஏற்கெனவே இரண்டாந் தர, மூன்றாந்தர ஆட்கள் மருந்து வியாபாரம் செய்து கிராம மக்களை இவர் பக்கம் செல்லவிடாமல் தடுத்தார்கள். இவரால் எதிர்த்துப் போர் புரிய முடியவில்லை. சரிதானே?” என்று மைத்ரேயி முரளியின் பக்கம் பார்க்கிறாள்.

அவன் தலையசைத்துப் புன்னகை தெரிவிக்கிறான்.

“ஒத்துக் கொள்கிறேன். மிஸ்டர் ராமசேஷன் தப்பாக நினைக்கமாட்டார். நாமும் அப்படித்தான் எதையோ நினைத்து இங்கு எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.” என்று மொழிகிறாள் ஞானம்.

“இப்ப நீங்க பேசுவதைப் பார்த்தால் யுத்தம் என்று வந்து எமர்ஜன்ஸி என்று ஒன்று எப்போதும் இவர்களெல்லாம் ஆக்டிவாக இருக்கும்படியாக நீடிக்கணும்னு சொல்கிறீர்கள் போல இருக்கு...” என்று சாடுகிறாள் ஜானகி.
“டாக்டர்களுக்கு சமாதான நாட்கள் என்று அவ்வளவு அர்த்தமில்லாத கெடுபிடிகளைச் செய்து கொள்ள வேண்டிய தில்லை” என்று கூறுகிறான் முரளி.

“நாட்டிலுள்ள வறுமையைத் தொலைக்காமல், வயிற்றுச் சோற்றுக்கு வழி செய்யாமல், நோயைத் தடுக்க வழியையும் ஏட்டுக் கல்வியையும் கற்பிக்க முயல்வது தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போன்றது. இந்தக் கோடிக் கணக்குச் செலவில் இத்தனை டாக்டர்களை வரவழைத்து உருப்படியில்லாமல் ஒரு திட்டத்தை உயிருடன் வைத்திருப்பதைவிட, இத்தனை கிராமங்களில் குழந்தைகளுக்கு, பெண்களுக்கு ஊட்டமான சத்துணவும் ஆடம்பரமின்றி வாழத் தேவை யான வசதிகளும் செய்து கொடுக்கலாம். சினிமாக் கொட்கைகள், தேவையற்ற ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் பெருகக் கூடாது. இந்தச் சுற்றுப்புறக் கிராமத்தின் வளர்ச்சியை நான் இங்கு வந்து இத்தனை நாட்களில் கணக்கிடும்போது, ஆறு மடங்கு வட்டிக் கடைகள் அதிகரித்திருப்பதையே குறிப்பாகக் கவனிக்கிறேன். என்ன பயன் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/256&oldid=1101320" இலிருந்து மீள்விக்கப்பட்டது