பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

ரோஜா இதழ்கள்

அவள் கருத்துக்கு ஒவ்வாததாகப் படுகிறது. ஞானம் ஏன் இப்படி எண்ணுகிறாள்?

ஞானத்தின் அந்தரங்க வாழ்விலும் பலவீனம் ஏற்பட்டு மேடிட்டிருக்க வேண்டும். அதனாலேயே அவளுடைய கம்பீரம் உள்ளுரச் சிதைந்து போயிருக்கிறது; அதனாலேயே நேருக்கு நேர் என்ற எதிர்ப்புக் களத்தை நோக்கத் துணிவின்றி விலகிக் கொள்கிறாள்.

முரளியைப் போன்ற ஒருவனை மணந்துகொண்டு ஒரு வீட்டை நிர்வாகம் செய்வது குறித்து மைத்ரேயி கற்பனை செய்து பார்க்கிறாள்.

அந்தக் கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரங்களிலெல்லாம் அவளுக்கு அதுபோல் இன்னொருவனுடன் இருந்த நினைவு வரும் என்ற எண்ணமே அருவருப்பாக இருக்கிறது.

“நீயே யோசித்துப்பார் மைத்ரேயி, உன்னால் நர்மதா, ஆயிஷா போல் தொண்டு செய்யமுடியுமா என்று. அவர் களெல்லாம் அவர்களுடைய தனிவாழ்க்கையைப் பற்றிப் பிறர் என்ன நினைப்பார்கள் என்று கூசமாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே சமுதாயத்தின் அதிர்ஷ்டமற்ற அங்கங்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று பொதுத் தொண்டில் ஈடுபடவில்லை. பொதுத்தொண்டிலோ அரசியலிலோ ஈடுபடுபவர்கள் அப்பழுக்கில்லாத அந்தரங்க சுத்தம் உடையவர்களாய், இரட்டை வாழ்க்கை நடத்த இயலா தவர்களாய் இருக்கவேண்டும். அப்படி இல்லாததாலேயே இன்று பொது வாழ்வும் அரசியலும் கறை பிடித்துக் கிடக்கிறது...”

ஞானம் பேசுவது மைத்ரேயிக்கு விசித்திரமாகவே இருக்கிறது.

இரட்டை வாழ்க்கை நடத்த இயலாதவள் பொது வாழ்வுக்கே போகக் கூடாது என்று ஞானம் கருதுகிறாளா?

ஆனால் ஞானத்தை, பெரிதும் அவள் மதிக்கும் அந்தத் தாயை அவளால் கருத்துவேற்றுமை கொண்டு எதிராளியாக்கிக் கொள்ள முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/262&oldid=1100290" இலிருந்து மீள்விக்கப்பட்டது