பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

263

இயலவில்லை. அப்போதும் அவர் கையில் மதுப்புட்டியை வைத்திருந்தார். அவரை ருக்மணியின் தந்தையாக, அந்த அழகிய தாயின் கணவனாக அவளால் ஒப்ப முடியவில்லை. அவர் ஒரு டாக்டராகச் சேவை செய்தவராகக் கற்பனை செயதுகூடப் பார்க்க இயலவில்லை. அந்த ஆண்டு இறுதியிலே அவர் இறந்துவிட்டார். மைத்ரேயி அப்போது அவர்களுடைய வீட்டுக்குச் சென்றாள்.

“மதுவின் கொடுமைக்கு எங்கள் வாழ்வே ஒரு மாதிரி மைத்ரேயி, கண் பார்வையற்ற நான் ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்வதைப்பற்றிநினைக்கவே இயலாது. நீ மணம் செய்து கொள்ளுமுன் குடிப்பழக்கம் இல்லாதவனா என்று பார்...” என்றாள் ருக்மணி கண்ணீர் வழிய. அப்போது மைத்ரேயிக்குக் கள்ளின் புளித்த நெடியோடு ஒருநாள் தன்னைத் தழுவ வந்த தனராஜின் நினைவு வந்தது. அவன் போதை நெடியோடு வந்ததைக் கண்டபோது, விவரம் புரியாத பேதையாகவே இருந்த மைத்ரேயிக்கு அருவருப்பாக அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த டாக்டர் உயர்குலத்தில் பிறந்து பிணியகற்றும் தொழிலுக்குப் பயின்று பணியாற்றச் சென்றவர். எத்தனை ஆழமான அடிநிலை! அப்படி யும் அந்த மாளிகை எப்படிச் சரிந்தது?

அவர் இறந்த பிறகு ருக்மணியின் குடும்பம் மதுரைக்குப் பெயர்ந்துவிட்டது.

அருகே முரளி வந்ததை அவன் குரல் கேட்ட பின்னரே அவள் உணருகிறாள்.

“நீங்கள் தினம் இங்கிருந்து காலேஜுக்குப் போவது கஷ்டமாக இல்லை?”

“கஷ்டம் என்ன? எட்டேமுக்கால் பஸ்ஸைப் பிடித்தால் சரியான நேரத்துக்குப் போய்விடுவேன்!”

பஸ் வருகிறது. அவன் ஏறி முன்னே நடக்கிறான். அவள் கூடைக்காரப் பெண்களின் அருகே உட்காருகிறாள். பூக்கடைக்குச் சென்று பூ வாங்கித் தொடுத்து விற்றுத் தொழில் செய்பவர்கள் அந்தப் பெண்கள். உயர்ந்த சாதியில் பிறந்திராத அந்தப் பெண்கள், எந்தப் போலி கெளரவமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/265&oldid=1100299" இலிருந்து மீள்விக்கப்பட்டது