பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

ரோஜா இதழ்கள்

செய்யுங்கள். ஒப்பினால் மேற்கொண்டு தீர்மானம் செய்யலாம் இல்லையேல் விட்டுவிடலாம்.”

மைத்ரேயி சிறிதுநேரம் பேசவில்லை.

ஒரு பிரம்மசாரி வாழ்வைத் துய்மையாக வாழ்வேன் என்று சொல்லமுடியாத உண்மையை அவன் ஒப்புக் கொள்கிறான். அப்படி, ஒரு தூய வாழ்வை வாழமுடியாத நான் என்று அவளும் ஒப்புக்கொள்வாளா?

நினைக்கவே கூச்சமாக இருக்கிறது.

ஞானம்மா ஒப்புக்கொள்ள வேண்டும் என்று விரும்பு கிறாள். அவளுக்கு சீரான பாதையில் ஏதோ இடையூறு நேர்ந்தாற்போல் கோபம் வருகிறது. ஒருமுறை தன்னை இழந்து தன் வாழ்வைக் கறையாக்கிக் கொண்ட அவள் மீண்டும் ஒரு ஆணை நெருங்கித் தன்னை இழப்பதா?

பல சமயங்களில் அவளுக்குத் தன் தனிமையில் அச்சம் தோன்றியதுண்டு. அன்று ராஜா முன் பகுதியில் வண்டி யோட்டியின் முன் அமராமல் பக்கத்தில் அமர்ந்தபோது அவளுக்கு அச்சம் தோன்றியது. சரேலென்று தன்கை மீது அவன் கை பட்டுவிடுமோ என்ற கற்பனை தோன்றித் தோன்றி அவளை அச்சுறுத்தியது.

“யோசனை செய்ய நீங்கள் நிறைய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். என் உள் மனசுக்கு, உங்களை என்னால் மகிழ்விக்க முடியும், நீங்கள் எனக்கு இன்றியமையாதவராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது. இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு வாழ்க்கையில், மற்றவர் வாழ்க்கையில் நேரமுடியாத பல நிகழ்ச்சிகள் நேர வாய்ப்பு உண்டு. மிதமிஞ்சும் குடிப்பழக்கத்தினின்று என்னைக் காப்பாற்ற, கடமையிலிருந்து வழுவாத, நாணயமுள்ள ஒரு நல்ல சேவையாளனாக என்னை நிலைநிறுத்த உறுதுணையாக எனக்கு ஒரு மனைவி வேண்டும். அந்தப் பொறுப்பை உங்களால் ஏற்க முடியும் என்று நான் நம்புகிறேன்.”

இந்தத் திறந்த மொழிகள் அவளைப் பிணிக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் புற அளவில் ஒருவரையொருவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/268&oldid=1100311" இலிருந்து மீள்விக்கப்பட்டது