பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

ரோஜா இதழ்கள்

கள் என்று என் வாழ்க்கையை ஒரு துறையில் ஒதுக்கிப் பயனுள்ளதாக்கிக் கொள்வதைப் பற்றியே சிந்தித்திருக்கிறேன். இது நான் சற்றும் எதிர்பார்த்திராத திருப்புமுனை...”

மைத்ரேயி முதலில் அவனை மற்ற ஆடவரை நோக்கிப் பேசுவது போலவே பேசினாள். ஆனால் கண்ணுக்குப் புலப்படாத போர்வைகளைக் களைந்தபின், அவனை நிமிர்ந்து நோக்கக் கூடக் கூச்சமாக இருக்கிறது.

“அப்படியானால் உங்கள் பிராமணத்துவம் உங்களைத் தடுக்கிறது...”

மைத்ரேயி துணுக்குற்று நிமிர்ந்து நோக்குகிறாள். “அந்தச் சொல்லையே நான் வெறுக்கிறேன். என்னிடம் பொய்யாக ஆசாரம் பார்ப்பதும் கோயிலுக்குப் போவதும் போன்ற வழக்கங்கள் ஒன்றுகூடக் கிடையாது. யாரேனும் என்னை ‘ஆர் யூ எ பிராமின் என்று கேட்டாலே கூசிப் போகிறேன்...”

“ஓ..நான்...ஐ டோன்ட் மீன் தட். பிராமணத்துவம் என்பது என்ன? மனிதத்துவத்தின் ஒர் உயர்ந்ததன்மை. உயர் ஒழுக்கத்தினால்தான் அதைப் பெற இயலும் என்று நான் நினைக்கிறேன். பிறப்பினால் மட்டுமல்ல; அந்தப் பொருளில் நான் சொன்னேன். நீங்கள் ஒருமுறை கன்னிமையை இழந்ததை அதனால்தான் ஒரு பெரிய தவறாகக் கருதுகிறீர்கள்.”

அது உண்மைதான் என்று அவளுடைய உள்ளம் ஆமோதிக்கிறது. தான் ஒரு கன்னியாக இருந்திருந்தால் இந்த முரளியின் எண்ணத்துக்கு அவள் தலை தாழ்த்தியிருப்பாளாக இருக்கும். ஆனால் அவனும் ஒரு பெண்ணை மணந்து கசப்பான அநுபவங்களுக்குட் படாமலிருந்திருந்தால் இத்தகைய சந்தர்ப்பத்தை இவனே விரும்பியிருப்பானா..?

“நீங்கள் அந்தப் பழைய கணவர் உங்களுக்கு முறையாக விலக்குக் கொடுக்காததனால் இப்படிச் செயவது முறையல்ல என்றோ, பாவம் என்றோ கருதுகிறீர்களானால் சொல்லுங்கள். என்றேனும் நீங்கள் இணைந்து வாழக்கூடும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பதானால் நான் என் எண்ணத்தைக் கூறியதையே தவறாக நினைக்கிறேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/270&oldid=1100336" இலிருந்து மீள்விக்கப்பட்டது