பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

ரோஜா இதழ்கள்

ஏன்? உயர்ந்த லட்சியம் என்று சொல்லிக்கொண்டு சந்தர்ப்பங்களுக்கு இரையாகாமல் நிற்பதைத்தானே நீ மதிக்கிறாய்? உண்மையில் தனராஜை மணந்தபின் அவன் உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்காதவன் என்ற காரணமே உன்னை வெறுக்கச் செய்தது. இப்போது உயர்ந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவே உன்னை மணக்க விரும்புகிறேன் என்று முரளி கூறுகிறான். இவனை உன் உள்ளம் மதிக்கிறது. ஆனால் ஏன் சீ! கல்யாணமா என்று ஏன் மறுக்கிறாய்,

‘ஏற்கெனவே ஒருவனுடன் ஒடிப்போய் அவனுடனும் ஒத்துவாழத் துணிவில்லாதவளாக ஓடிவந்தாள். இப்போது இன்னொருவனைப் பிடித்துக் கொண்டாள் என்று மேல் நோக்காகப் பார்க்கும் உலகம் பழிக்கும்? தனராஜே அறிந்தால் என்ன நினைப்பான் ?

வீட்டுக்கு அவள் திரும்பும் நேரத்தில் ஞானம் வீட்டிலிருக்க மாட்டாள் என்று எண்ணியிருப்பது பொய்யாகிறது.

வாயிலில் ஒரு கறுப்புக்கார் நிற்கிறது.

யாரோ வந்திருக்கிறார்கள். ஞானம் பேசும் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அவள் நேர்வாயிலில் நுழையாமல் தோட்டத்து வழியே சென்று பின்புறமாக நுழைகிறாள்.


17


ஞானம் அரசினரின் கருத்தடைப் பிரசாரத்தைக் குறித்துக் காரசாரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாள். “பெண் குலம்தான் எப்போதும் சுமை சுமக்கவேண்டுமா? துன்பம் அநுபவிக்க வேண்டுமா? வாய்விட்டுச் சொல்லத் தெரியாமல் கிராமங்களில் பெண்கள் இந்த ஐயுஸிடி(IUCD) திட்டத்தில் துன்பம் அநுபவிக்கிறார்கள். அறிந்தவர்கள் எல்லாருமே ஃபிரிக்‌ஷன் காஸஸ் கான்சர் (Friction Causes Cancer)என்று ஒப்புக் கொள்கிறார்கள். தெரிந்து ஏன் தண்டனை கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/272&oldid=1100369" இலிருந்து மீள்விக்கப்பட்டது