பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

271

வேண்டும்? செயற்கைத் தடுப்பு முறைகளெல்லாம் தாகத்துக்கு உப்பு நீரைக் குடிப்பதுபோல் என்று காந்திஜியே கருத்துத் தெரிவித்திருக்கிறார். காந்தீயக் கொள்கைகளில் ஊறியவர் என்று நினைக்கும் ஆட்சிபீடத்தார், எவனோ வெளி நாட்டான் இந்த எல்லாம் கொள்ளும் ஏழை நாட்டை நம்பி உருவாக்கிய சரக்கை எல்லாம் நம் தலையில் கட்டுவதற்கு எப்படி இடம் கொடுக்கின்றனர்? அதற்கு இப்படி ஓர் திட்டம்...?”

ஞானத்துக்கு இவ்வளவு ஆத்திரம் இருக்கிறதென்பதை மைத்ரேயி அறியாள். எனவே அவள் யாரிடம் இப்படிப் பேசுகிறாள் என்பதை அறிய ஆவல் கொள்கிறாள். அந்த திட்டத்தைப் பார்க்க யாரேனும் விருந்தினர் வருவதுண்டு.

அப்படி யாரேனும் வந்திருந்து, அலுவலகத்தில் ஒன்றும் பேசாமல் இங்கே வந்து குமுறலைக் கொட்டுகிறார்களா? தம் தம் பொருள் வசதி ஆதாயங்களுக்காக உண்மையை நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் திரை மறைவில் வந்து குமுறல் களைக் கொட்டி ஆறுவது இந்நாட்டின் சாபக்கேடா?

மைத்ரேயி எட்டிப் பார்க்கிறாள். மொட்டையாக வழுக்கைத் தலை, மொழு மொழுவென்ற முகத்தில் பட்டை பட்டையாக விபூதி, செவிகளில் வயிரக் கடுக்கன், இழிந்து வழியும் சதை .....

எங்கோ பார்த்தாற் போலிருக்கிறது. அருகில் புடவை தெரிகிறது. பச்சையில் ஒற்றை விளிம்பு சரிகை போட்ட பட்டுச்சேலை. இன்னும் யாரோ ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். ஞானம் பேச்சை முடிக்குமுன் ஜன்னலில் மைத்ரேயியின் உருவம் தெரிந்துவிடுகிறது.

“என்ன ஒளிஞ்சிண்டு பார்க்கறே? வா, மைத்ரேயி! உனக்காகத்தான் இங்கே இவர்கள் எல்லாரும் வந்திருக்கிறார்கள்.”

முன்னறையில் அடிவைத்ததும் மைத்ரேயி கண்களை அகல விழிக்கிறாள்.

லோகா... அந்த குண்டு மனிதர் அவளுடைய கணவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/273&oldid=1101329" இலிருந்து மீள்விக்கப்பட்டது