பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

273

வந்திருக்கேன். இன்னிக்கு நாட்டில் நடக்கும் அராஜகத்தைத் தொலைக்க உங்களைப்போல் யங்ஸ்டர்ஸ் வந்துதானாகணும்” என்று அம்மை வடு இளைஞன் தானே அவளை வரவேற்க வந்ததை வெளியிட்டு விடுகிறான்.

மைத்ரேயி குரோதமாக ஞானத்தை விழித்துப் பார்க்கிறாள்.

“இப்ப விருதுநகரில் ஒரு சின்னப்பயல்தான் போட்டி போடறான். அவா நிறையச் சிறு பையன்கள் தான் பார்ட்டி முழுசும். நம்ம பக்கமும் அதுபோல் வரணும். அதனால்தான் உன்னைத் தேடிண்டு வந்திருக்கோம்” என்று மொட்டைத் தலை வற்புறுத்துவதுபோல் கூறுகிறார்.

“நான் சொன்னா நீ தப்பமாட்டேன்னா நம்பி வந்திருக்கோம்” லோகா மெதுவாக ஊசிக் குத்தாய் தைக்கிறாள்.

“அடாடா...நீங்கள் இப்படி எல்லாம் ஏன் நினைக்கணும் ஸிஸ்டர்! பர்த் டே ஸெலிப்ரேஷனில் பேசறது பத்தி நான் ஆட்சேபம் சொல்லலே- ஆனால் பொலிடிகல்னு வந்து நிற்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது?”

“நீங்க என்ன? மூணங்கிளாஸ் படிக்காதவன் பாலிடிக்ஸில் வந்து புகுந்த பெரிய லீடராகி விடுகிறான்? நீங்களெல்லாம் பார்ட்டியில் சேரலேன்னா, அப்புறம் யாரைத்தான் சேர்ப்பது?” என்று மொழிகிறான் அம்மைவடு.

“மன்னிச்சுக்குங்க ஸிஸ்டர், பொலிடிகல் ஃபீல்ட் எனக்குச் சரிவருமான்னுதான் பயமாயிருக்கு. நான் ரொம்ப ஸென்ஸிடிவ்... உணர்ச்சி வசப்பட்டு விடுகிறேன்...” என்று ஞானத்தைக் கண்களால் துணைக்கு அழைக்கிறாள். ஞானம் அவளைப் பார்க்காமலே எங்கோ வெளியே நோக்குகிறாள்.

“நீ என்ன பிகு பண்ணிப்பே போலிருக்கே? நீ மட்டும் தான் ஸென்ஸிடிவா? நானும்தான் ஸென்ஸிடிவ். எல்லாருந்தான் அப்படி. இப்ப உன்னைப்போல இருக்கிற இளைஞர்கள் வரலேன்னா நம்ம கம்யூனிடியை ரெப்ரஸன்ட் பண்ண ஆள் குறைஞ்சு, அங்கே தி.மு.க. வரும். அதை நீ நினைச்சுப் பார்க்கணும்” என்று உண்மையை விளக்குகிறாள் லோகா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/275&oldid=1101332" இலிருந்து மீள்விக்கப்பட்டது