பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

275

ரேஷன் க்யூவில் நிற்கும் நிலைதான் காண்கிறோம். நான் உள்ளே இருந்து பார்த்தவள். உண்மையாக சுதந்திரத்துக்குப் பாடு பட்டவா யாரும் இன்னிக்கு அங்கே இல்லே. அதுவும் நம்ம கம்யூனிடிக்கு காங்கிரஸ் ஒண்ணுமே நல்லது பண்ணல. இப்போது ஒரு மாறுதலை எல்லாருமே வரவேற்கிறார்கள். அதனால் நீ தயங்கவே வேண்டாம்...” என்று லோகா தன் பேச்சை முடிக்கு முன் அம்மைவடு தன் தோல்பையைத் திறந்து கத்தையாகக் காகிதங்களை எடுத்துப் போடுகிறான்.

இரண்டு மூன்று நீளமான அச்சிட்ட காகிதங்களை உருவி மைத்ரேயியிடமும் ஞானத்திடமும் கொடுக்கிறான். சுதந்திரக் கட்சியின் கொள்கைகள் கொண்ட ஒருதாள். இன்னொன்று அதில் சேருவதற்கான விண்ணப்பப் பாரம்.

“நீ அரசியல் உலகில் ஒரு நட்சத்திரமாகப் போகிறாய்!” என்று குளிர்ச்சியாகப் புகழ்பாடுகிறது மொட்டை.

“நான் இம்மாதிரியான பொதுக் கூட்டங்களில் பேசியதே இல்லை ...”

“சும்மா பொய் சொல்லாதே. அன்னிக்கு காந்தி ஜயந்தி கட்டத்தில் நீ பேசிய குரல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. அது பொதுக்கூட்டம் இல்லையா?”

“நீங்க கட்டாயம் ஒப்புக் கொள்ளணும். பொலிடிகல்னு நினைக்க ஒரு தப்பும் இல்லை. நீங்க யோசனை செய்து பாருங்கள். இதெல்லாம் உங்களுக்கு எங்களுக்கு எல்லாருக்கும் கடமை. இப்படி நாமெல்லாம் ஒதுங்கினால் எப்படி?”

“அதெல்லாம் கவலைப்படவேண்டாம் ஸ்ரீனிவாசன். மைத்ரேயி மாட்டேன்னு சொல்லமாட்டாள்...என்ன?”

லோகா அழகாகச் சிரிக்கிறாள். “நீ யோசனை பண்ணி வை, ஸ்ரீனிவாசன் மறுபடி வருவார்... என்ன?”

“சரி ஸிஸ்டர்...”

“ஓ கே.... அப்ப கிளம்பலாமா? வரேன் ஞானம்மா!”

லோகா எழுந்திருக்கிறாள்.

“வரோம்மா !”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/277&oldid=1101337" இலிருந்து மீள்விக்கப்பட்டது