பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

277

நம்பியிருந்தது. ஆளும் கட்சியை அசைக்க முடியவில்லை. உனக்கு ஒன்று மட்டும் நான் சொல்வேன். நீ தேர்தலுக்கு நிற்கும் ஆசை இருந்தால் என் சேமிப்பை நான் தருகிறேன். எவரோ பணம் கொடுக்கிறார் என்று மட்டும் நம்பிவிடாதே. பிறகு நீ வெற்றி பெற்றாலும் அவருக்கு அடிமையாக வேண்டும்; தோற்றாலும்தான். புரிந்ததா?” மைத்ரேயி நெஞ்சத்து நெகிழ்வை விழுங்கிக் கொள்கிறாள்.

“நான் நிச்சயமாக அந்தத் தேர்தல் வலையில் விழமாட்டேன்.”

“அது உன் இஷ்டம். உனக்கு அறிவுரை சொன்னேன்.”

“அந்த மொட்டைத் தலையை நினைத்தால் சிரிப்பாய் வருகிறது. தனியாக இந்த வீட்டில் ஏறமாட்டேனென்று பொட்டை அதிகாரம் செய்து கொண்டு இருந்தவர் இப்போது எப்படிச் சேர்ந்திருக்கிறார் லோகா, லோகாவென்று... லோகா எப்படி மாறிவிட்டாள்!”

“சில பலன்களை எதிர்பார்த்துக் கொண்டு அரசியலில் இருப்பவர்கள் மாறுவதில் ஓர் வியப்பும் இல்லை. இந்த வீட்டுக்கு இப்போது யோகம் அடித்திருக்கிறது. வராத பெரிய மனிதர்களெல்லாம் வருகிறார்கள். இன்னும் யார் யார் வருவார்களோ?” என்று கண்களைச் சிமிட்டுகிறாள்.

“நான் திரும்பவும் ஓடிப்போய் விடப்போகிறேன்!” என்று கூறிக்கொண்டு சமையலறைக்குள் செல்கிறாள் மைத்ரேயி.

லோகாவின் வீட்டில் சில நாட்கள் தங்கி அவளுடைய தயவால் அந்த இல்லத்துக்குச் சென்று கல்வி பயின்று முன்னுக்கு வந்திருப்பவள் மைத்ரேயி. அதற்காக அவள் உரிமை கொண்டாடுகிறாள். ஆனால் முழுதுமாக உணவு, உடை, உறையுள், கல்வி உள்பட அன்பையும் பொழியும் இந்த ஞானம் அவள் மீது அப்படி சுதந்திரத்தைப் பறிக்குமளவு உரிமை கொண்டாடவில்லை.

“என்ன யோசனை? இரவு எனக்குச் சாப்பாடு கிடையாது...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/279&oldid=1101341" இலிருந்து மீள்விக்கப்பட்டது