பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

279

செருப்பொலி உள்ளே கேட்கும் போதுதான் குளிர்சிலிர்ப்போடு படக்கென்று திரும்புகிறாள். “என்ன, ராமராஜ்யம் வந்து விட்டதென்றே கனவா, மைத்ரேயி? இன்னும் கூட்டுக் கட்சிகள் பதவிக்கு வரவில்லையே? கதவைத் திறந்து வைத்துக் கொண்டே கனவு காண்கிறாயோ?”

மைத்ரேயி உண்மையிலேயே நாணிப் புத்தகத்தைப் பட்டென்று மூடுகிறாள்.

ஞானம் கையிலிருந்த பீடாவை மேசையின்மீது வைத்து விட்டு, “புடலங்காய் வைத்திருக்கிறாயா?” என்று கேட்கிறாள்.

“நான் ஒண்ணுமே பண்ணலே அக்கா...” என்று மைத்ரேயி சோம்பல் முறிக்கிறாள்.

அவள் அருகிலேயே நிற்கும் ஞானம் சில கணங்கள் ஒன்றும் தோன்றாதவள்போல் கூர்ந்து நோக்குகிறாள்.

“மத்தியானம் ஹோட்டலுக்குப் போனியா?”

ஓட்டலில் வயிறு மந்தித்துவிடும்படியாக ஏதேனும் சாப்பிட்டிருப்பாளோ என்றுதான் கேட்கிறாளா?

மைத்ரேயி மறுமொழி கூறவில்லை.

“என்ன சமாசாரம்?”

“உம்..? என் மனசு குழம்பிக் கிடக்கிறது அக்கா. நூல் பாலத்தில் நடந்து தாண்டனும். கீழே விழுந்தால் கிடுகிடு பாதாளம். அப்பால் போனால் பொன்னகரம் இருக்கிறது என்று ஆசை காட்டுகிறார்கள். நூல் பாலம் வேண்டாமென்று ஒதுங்க வேண்டுமானால் குகைக்குள் ஒளிய வேண்டும். குகையில் புலி இருக்குமோ, புதையல் இருக்குமோ தெரியாது...”

“என்ன ஆச்சு? துணிந்து மேடையில் ஏறிப்பேசு. இல்லா விட்டால் கட்சி, அரசியல் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டுப்போ. இதற்கென்ன தலைபோகும் யோசனை?”

“இது என்ன யோசனை?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/281&oldid=1101345" இலிருந்து மீள்விக்கப்பட்டது