பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

281

மனக்குழப்பங்களை விசிறியடிப்பதுபோல் தலையைத் திருப்பி வெளியே பார்க்கிறாள். அம்மைவடு சீனிவாசன் தான் காரை ஓட்டுகிறான். அவனுடைய ஊரில் அவன் பசையான ஆள். நிலபுலன்களோடு ஒரு அச்சகம், அரிசிமில் முதலியவைகளுக்குச் சொந்தக்காரன். சட்டம் படித்துத் தேர்ந்தவன். வழிநெடுக அவன் தன் பிரதாபங்களைப் பாடிக் கொண்டு வருகிறான். “நீங்கள் பணச்செலவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். எனக்குப் பணம் பெரிசில்ல, கொள்கைதான் பெரிசு. லோகாவின் தகப்பனார் எல்லாம் எங்களுக்கு ரொம்ப வேண்டியவர். என் பெரிய மாமா சந்தான கிருஷ்ணமாச்சாரி, அந்தக் காலத்தில் ராஜ்நகர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். சின்ன மாமா, கதர் போட்டுண்டு ஜெயிலுக்குப் போனவர். உண்மையான தியாகிகளுக்கு என்ன இருக்கு? அவாளைவிடத் தியாகம்னு சொல்லிண்டு பதவியில் இருக்க ஆசைப்பட்டுக் கதர் போடறவன்தான் இப்ப பெரிய காங்கிரஸ்காரன். நான் நினைச்சா ஐ.ஏ.எஸ்.ஸாப் போயிருக்கலாம். கிராமத்தில் இருந்து நம்மாலானதைச் செய்யணும்னு தங்கிட்டேன்.”

“இந்தத் தொகுதியில் நான் நிற்கணும்னு நீங்க ஏன் வற்புறுத்துகிறீர்கள்? எனக்குப் பணம் செலவழித்து என் வெற்றிக்குப் பாடுபடுவதைவிட நீங்களே நிற்பதுதான் உசிதம். உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது; என்னைவிட...”

“நீங்கள் இல்லை என்றால் நான் தான் நிற்கப் போகிறேன். அதுபற்றி சந்தேகமில்லை. உங்களை ஏன் வற்புறுத்துகிறேன்னா, இந்தத் தொகுதியில் ஸிட்டிங் மெம்பர் ராஜ பூஷணி. ஆளும் கட்சியானதால் எல்லாவகையிலும் வளைச்சுக் கொள்ள வழி செய்வானுகள். முள்ளை முள்ளால்தான் எடுக்கணும். என்ன ஆயிரம் இருந்தாலும் ஜனங்களுக்கு ஒரு பெண் நிற்கிறாள்னா கிளாமர் இருக்கத்தான் இருக்கு. அதனால்தான் எல்லா வகையிலும் அவளைவிட மேலான உங்களை நான் வற்புறுத்தறேன்! லோகாவே இங்கே நிற்கலாம்னு அபிப்பிராயப்பட்டேன் நான். ஆனால், அவா சொந்த ஊர்ப் பக்கம்தான் நிக்கணும்னு அவர் நினைக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/283&oldid=1101349" இலிருந்து மீள்விக்கப்பட்டது