பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

ரோஜா இதழ்கள்

அந்தத் தீர்மானமும் ஒரு வகையில் சரிதானே. இங்கே விட அங்கேதான் லோகல் இன்ஃப்ளுயன்ஸ் இருக்கும். லோகம்மாதான், ஒரேயடியாப் புதிசா யங்ஸ்டர்ஸுக்குக் கொடுக்கணும்னு உங்களைத் தேர்ந்தது.”

“நான் உங்களுடைய கட்சிக்குப் பேசுவதற்கு மட்டுமே தான் ஒப்ப முடியுமே ஒழிய, இருபத்தொரு வயசு எனக்கு முடிய இன்னும் இரண்டு மாசமிருக்கிறது. நான் நிச்சயமாகத் தேர்தலுக்கு நிற்க இஷ்டப்படவில்லை. சொல்லப் போனால் உங்கள் கட்சியை ஒரு சில காரணங்களுக்காக மட்டுமே ஆதரிக்கிறேன். உங்கள் கட்சியின் முக்கியமான கொள்கையையே நான் முற்றிலும் எதிர்ப்பவள். உள் மனசோடு நான் ஒப்புக் கொள்ள வேண்டுமானால் முதலாளித்துவத்தையே வெறுப்பவள். நான் எப்படி இந்த முத்திரையைக் குத்திக் கொள்வேன்?” என்று கேட்கிறாள் மைத்ரேயி.

‘அடாடா..? யார் சொன்னது, இது முதலாளித்துவக் கட்சி என்று ? இப்படித் தவறானதொரு கருத்தைப் படித்தவர்களெல்லாமே பரவவிட்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் நானே கம்யூனிசத்தை ஆதரிப்பவன்தான்.”

“ஆமாம், வண்ணானுக்கு வண்ணாத்தி மேலாசை. வண்ணாத்திக்கு. என்று ஏதோ பழமொழி சொல்வார்களே? அப்படித் தான் இருக்கிறது. நீங்கள் கறுப்பு சிவப்புக் கொடியைச் சேர்த்துக் கொள்கிறீர்கள். அவர்கள் கத்தி சுத்தியலையும் கையோடு கொண்டு வருகிறார்கள். இது விநோதத்திலும் விநோதமாக இருக்கிறது.”

சீனிவாசன் சிரிக்கிறான்.

‘நீங்கள் புரியாதவர்களுக்கெல்லாம்கூடப் புரியும்படி பேசக்கூடியவர்கள்னு எடுத்த எடுப்பிலேயே நிரூபிக்கிறீர்கள். இந்தக் கூட்டெல்லாம் காங்கிரசைப் பதவியிலிருந்து இறக்கத் தான். காங்கிரஸ் இத்தனை நாள் நம் கம்யூனிடிக்கு என்ன செய்திருக்கிறது? ஒரு கல்லூரியிலும் திறமைக்கு இடம் கிடையாது. உத்தியோகப் பதவிகளில் வரிசைப்பிரகாரம் வரும்போது ஒரு பிராமணனுக்குத் தலைமைப் பதவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/284&oldid=1100448" இலிருந்து மீள்விக்கப்பட்டது