பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

283

வருவதாக இருந்தால், மேலிருப்பவர்க்கு எக்ஸ்டென்ஷன் கொடுத்தோ, ஏதோ செய்தோ அந்தச் சாதிக்காரன் அப்பதவிக்கு வரமுடியாமலிருக்க வகை செய்கிறான். அவன் ஒய்வு பெற்றவுடன் அடுத்தவனுக்கு அந்தப் பதவி போகும். இதெல்லாம் அக்கிரமம் இல்லையா? எந்தத் துறையை எடுத்தாலும் நம் சாதியினர் முன்னேற முடியாமல் ஆயிரத்தெட்டு இடைஞ்சல்களைச் செய்திருக்கிறார்கள். இப்போது நாமும் குரல் எழுப்பச் சில இடங்களையேனும் பிடித்துக்கொள்ள இவர்கள் வகை செய்கிறார்கள். நான் ஏன் ஐ.ஏ.எஸ். என்று போகவில்லை? நம் மண்ணை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. நம்மவர் இந்தச் சங்கடங்களினால் தாக்குப்பிடிக்க முடியாமல் கிராமத்தைவிட்டு மண்ணைவிட்டுப் பெயர்ந்து நகரத்தில் நாலு வீட்டைக் கட்டிப்போட்டு வாடகை வாங்கி நிம்மதியாக காலம் கழிக்கலாம்னு நினைக்கிறார்கள். அது தப்பு. நம் உரிமைகளை நாம் விட்டுக்கொடுத்துவிட்டு பம்பாய், டில்லி என்று போவது, நம்மை விரட்டப் பார்ப்பவர்களுக்கு நல்லது செய்வதாகும். இல்லையா, மிஸ் மைத்ரேயி?” என்று கேட்கிறான்.

“மிகவும் உண்மை” என்று ஒப்புக் கொள்கிறாள் மைத்ரேயி.

“இந்த நாட்டில் சாதிகள் நிச்சயமாக அழியாது; அதனால் கம்யூனிஸம் வரவே முடியாது. ‘கிளாஸ் வார்’ என்று வரும்போது சாதி குறுக்கிட்டுவிடும். எனவே, சமுதாயத்தைப் பழைய முறையிலேயே பலப்படுத்துவதனால்தான் பொருள் வளத்துக்குப் பாடுபட முடியும். என்ன சொல்கிறீர்கள் ?”

அவன் அவளுடைய எதிர்ப்புச் சிந்தனையையே துண்டித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

“பழைய முறை என்றால் எப்படி? பழைய வருணாசிரமப்படியா?”

“அப்படித்தான் வரவேண்டும். தொழிலை அடிப்படையாகக் கொண்டுதான் சாதிகளும் பழக்க வழக்கங்களும் அமைந்திருக்கின்றன என்றாலும், இயல்பிலும் அந்த அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/285&oldid=1100452" இலிருந்து மீள்விக்கப்பட்டது