பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

284

ரோஜா இதழ்கள்

தொழிலுக்கு ஏற்ற வகையில் பிரிவுகள் இருக்கின்றன என்று நான் கூறுகிறேன். சந்தர்ப்பங்களையும் சலுகைகளையும் எத்தனையோ பேருக்கு அளித்தாலும் சில குறிப்பிட்ட வர்க்கத்தாரில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்கூட முன்னுக்கு வருவதில்லை. ஆனால் உயர் குலம் என்ற பிரிவிற் பட்டவர்கள் எத்தனை தடைகளைப் போட்டாலும் மீறிக்கொண்டு கல்வியும் திறமையும் பெறுகிறார்கள்...”

“அப்படி முழுசும் சொல்ல முடியாது. தாழ்த்தப்பட்டவர்கள் பரம்பரை பரம்பரையாக அடிமை போலிருந்ததனால் அவ்வளவு விரைவில் மேலுக்கு வந்துவிட முடியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். வருணாசிரம விதிகள் நிச்சயமாக இன்றும், இன்னும் வரப் போகும் காலத்துக்கும் பொருந்தாது. பிறப்பினால் ஒருவன் தொழிலை வரையறுக்க முடியாது. நீங்கள் சொல்லும் உயர் குலத்தார் இன்று பொருளுக்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை. உயர்குலத்தான் மனிதத்துவத்தின் உயரிய இலட்சியத்தை என்றோ விட்டுவிட்டான். இன்னும் வெறும் கூட்டை மட்டும் வைத்துக்கொண்டு உயிர் கொடுப்பதாகச் சடங்குகள் செய்வது கேலிக்கூத்து. இந்த மண்ணில் பிறந்திருப்பதற்காக நமக்கு உரிமைகள் மறுக்கப்படுவது அநியாயம். ஆனால் நாம் உயர்குலம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதிகள் நமக்கு இல்லை. அதனாலேயே உயர் சாதி என்ற ஒன்று, நடை முறையில் கொள்ள முடியாத வாழ்க்கை முறைகளை உண்மையாகவே கொண்டு வாழும் ஒரு பிரிவு இன்றைய சூழ்நிலையில் உயிர்த்திருக்க முடியாது. அது வேண்டியதில்லை. பிரும்மத்தை வழிபடும் பிராமணனுக்குக் கல்லுருவுக்குப் பூசைகள் செய்யும் குருக்கள் என்ற சாதியிற்பட்டவரும் கீழானவரே. அப்படியிருக்க, அந்த உயர்ந்த நிலையைப்பற்றி எண்ணிக்கூடப் பார்க்க இயலாத இந்த இன்றையப்பிரிவைப் பிரிவாகவே தனித்து வைப்பதில் என்ன நன்மை? இது வெறும் கேலிக் கூத்து. இன்றைய அந்தணன் வெற்று நூலைத் தரித்துக்கொண்டு, செல்வரை அண்டி, பொய்க்கு அஞ்சா அரசியல்வாதியை அண்டி, ஏவற்பணி செய்யத் தயங்குவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/286&oldid=1123769" இலிருந்து மீள்விக்கப்பட்டது