பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

285

தில்லை. பொருளுக்காகத் தன் மானத்தைக் காலடியில் தேய்க்கத் தயங்குவதில்லை. அந்தணரல்லாத பிரிவில் பட்டவர் அந்தணர்க்குரிய தொழில்களில் இறங்காமலுமில்லை. மிகக் குறைந்த சதவிகிதத்தினராக இருக்கலாம். நான் வன்மையாகப் பேசுவதாக உங்களுக்குத் தோன்றலாம். ஒவ்வொரு சமயம் நம்முடைய சமுதாயத்தின் வறட்சிக்கு நாமே காரணம் என்றே நான் எண்ணுகிறேன்...”

இந்த மூச்சு முட்டும் ஆவேசத்தைச் செவியுறும் சீனிவாசன் எதிர்த்துப் பேசவில்லை “அடேயப்பா! நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள்!” என்று புகழுரையை வீசுகிறான். “இந்தக் கட்சிக்கு நீங்கள் ஸ்டார் ஸ்பீக்கர். ஆமாம். பேச்சின் பொருளைவிட, அதன் அலங்கார ஜோடனைகளே மக்களைக் கவருகின்றன. ஒரு மேடையில் நின்றால் குரலைக் கேட்டால் சொற்களைக்கேட்டால் மக்கள் அசந்து போகணும். நீங்கள்தான் இந்தக் கட்சிக்கு உயிர் தரப்போகிறீர்கள். இப்போதே அடிச்சுச் சொல்லலாம்.”

மைத்ரேயியின் உற்சாகமும் ஆவேசமும் மடிந்து விழுகின்றன.

புறநகர்ப் பகுதிகள் மறைந்து பசிய வயல்களும் தென்னை மரங்களும் பசுமையினிடையே பளிச்சென்ற அலுமினியப் பூச்சுக் கம்பங்களும் நீரிறைக்கும் மின் இயந்திரக் குடில்களும் கண்களையும் கருத்தையும் கவருகின்றன. சாலையில் குடிசைகள் காணும் இடங்களிலெல்லாம் கறுப்பு சிவப்புக் கொடிகள்; தேநீர் கடைகள், முடிதிருத்தும் கடைகள் நெடுகிலும் கறுப்பு சிவப்புத் தோரணங்கள். படிப்பகங்கள், அறிவகங்கள் என்ற அறிவிப்புடன் காணப்படும் மூங்கிற்தட்டிக் கூடங்களில் அண்ணாவின் உருவப்படம் காட்சி தருகிறது. அகப்படும் கற்சுவர்களில், கால்வாய்ப் பால மதகுகளில், காங்கிரஸ் மந்திரிகளின் ஆட்சி ஊழலைப் பற்றிய எதுகை மோனை வசைகள், கொட்டைக் கரி எழுத்துக்களில் கண்களைக் கவ்வுகின்றன. இந்தி வசை இலக்கியத்திற்கு நாயகமாக விளங்குகிறது. இந்திக்குப் பாடை, தமிழுக்கு மேடை. தமிழுக்கு உயிர்; இந்திக்குத் தூக்குக்கயிர் என்றெல்லாம் சிரிப்பை வரவழைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/287&oldid=1123770" இலிருந்து மீள்விக்கப்பட்டது