பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

287

அவனுடைய ஆதரவைப் பெற்றுத் தம்மை உயர்த்திக் கொள்ளத் தவறவில்லை. இன்னொரு ஆதிக்கம் வரும்போது, அப்போதும் தம் சுய முன்னேற்றம் கருதி அதற்குரிய மொழியைக் கற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இந்தி வேண்டாமென்று சொன்னாலும் பல பெண்கள், அந்த மொழியைக் கற்றுக் கொள்ளாமலில்லை.

இந்தி, வடமொழிகளைக் கற்றவர்களில் அனைவரிலும் ஒரு சிலரே அந்தணரல்லாத குலத்திற் பிறந்தவர்கள் இருப்பார்கள். ஆனாலும், இப்போது பெரும்பான்மையோர் வடக்கு மொழிகளை எதிர்த்து உணர்ச்சிவசப்பட்ட போராட்டத்தை நடத்தும்போது, இந்த மேன்மைச் சாதியினரைக் கொண்ட கட்சியும் இணைந்திருக்கிறது. இதன் நலிவு, ஏதேனும் ஒர் ஆதாரத்தை அண்டினால் தான் உயிர் வாழலாம் என்ற அளவுக்குப் பரிதாபமாக இருக்கிறது.

பஞ்சம் வந்துற்றபோது, பாலுக்கழும் குழந்தைக்கும் கற்றாழைச் சோற்றை உணவாகக் கொடுக்கலாம் என்பது போன்றதுதான் இந்த நிலை.

மைத்ரேயியின் மனத்திரையில் இத்தகைய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கையிலேயே அவர்கள் திருச்சின்னபுரத்தில் துழைகின்றனர். கடைவீதியே தேர்தல் களமாக இருக்கிறது. நட்சத்திரமும் உதயசூரியனும் பிறைச் சந்திரனும் நீலமும் கறுப்பும் சிவப்பும் பச்சையுமாக, மூவர்ணக் கொடித் தோரணங்கள். கடை வீதியைச் சாலை கடக்கும் இடத்தில் பளிச் பளிச்சென்று சுவரொட்டிகளில் நீல எழுத்துக்கள் கண்களைக் கவருகின்றன. இராஜாஜி பிறந்ததின விழாவில் பேசுபவர்கள் பட்டியலில் அவள் பெயர் கொட்டை எழுத்துக்களில் விளங்குகிறது. ‘செல்வி. மைத்ரேயி எம்.ஏ.’

“இதென்ன, போஸ்டரில் எல்லாம் என்னைக் கேட்காமல் பேரைப் போட்டிருக்கிறீர்கள்? எம்.ஏ. என்று வேறு போட்டிருக்கிறீர்கள்?”

“அதனால் என்ன? நீங்கள் எம்.ஏ.தானே?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/289&oldid=1101355" இலிருந்து மீள்விக்கப்பட்டது