பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

ரோஜா இதழ்கள்

சீனிவாசனின் நிதானமான மறுமொழி அவளுடைய கோபத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. “நான் எம்.ஏ. பரீட்சைகூட இன்னமும் எழுதலியே?”

‘அதனால் என்ன ? நான் பிராக்கெட் போட்டுக் குடுத்தேன். போடாமலே அச்சடிச்சிட்டான். ஒண்ணுமில்லாதவனெல்லாம் பொய்யா என்னென்னமோ சொல்லிக்கிறான். நீங்க இதோ பரீட்சை எழுதினா பாஸ் பண்ணப் போறேள். என்ன வந்துடுத்து இப்ப, நாம் பொய் சொல்லலியே?”

மைத்ரேயியினால் விழுங்கிக்கொள்ள முடியவில்லை. கோயில், குளத்தைச் சுற்றிய தெருக்கள் எல்லாவற்றையும் கடந்து அவன் வண்டியைச் செலுத்துகிறான். ஊரைவிட்டுத் தள்ளி சினிமாக் கொட்டகையின் பின்னே அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் எழும்பியிருக்கின்றன. ஒரு பெரிய வீட்டின் முகப்பில் சுதந்திரக் கட்சியின் கொடி தெரிகிறது. அந்த வாயிலில்தான் வண்டி வந்து நிற்கிறது. வாயிலில் கூர்ச்சான அழகு மரங்கள் இரண்டு வளர்ந்திருக்கின்றன. சுற்றுச் சுவருக்குமேல் வண்ணத் தோகைகள்போல் போகன் வில்லாக் கொடிகள் வண்ண வண்ண மலர்களைச் சுமந்து கொண்டு விழுகின்றன. முன்முற்றம் அகன்று சிமிட்டித் தளமாக இருக்கிறது. இரண்டு பணியாளர், நீண்ட கயிற்றில் கறுப்பு சிவப்புக் காகிதத்தையும் நட்சத்திர நீலத் தாளையும் ஒட்டித் தோரணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒருவன் ஓடிவந்து காரின் கதவைத் திறக்கிறான்.

வீட்டுக்குள்ளிருந்து இரண்டு பெண்மணிகளும் லோகாவின் கணவரும் வருகின்றனர். “வாங்கோ...” என்று அவளைப் புன்னகையுடன வரவேற்கும் பெண்மணியின் முகத்தில் வயிரங்கள் வண்ண ஒளிக் கதிர்களை வாரி வீசுகின்றன.

நடுத்தர வயதுக்குரிய அவள் சாதி ஆசாரப்படி காஞ்சீவரம் பட்டுச் சேலையை உடுத்தியிருக்கிறாள். இன்னொருத்தி வயசில் இளையவள். ஆனால் அசைய முடியாத பருமன். அவளும் வயிரமும் தங்கமும் காஞ்சீபுரம் பட்டுமாக மின்னுகிறாள். ஆறு கஜம் சேலை அணிந்து நிற்கும் அவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/290&oldid=1100475" இலிருந்து மீள்விக்கப்பட்டது