பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

289

சீனிவாசன், “மனைவி” என்று அறிமுகம் செய்துவைக்கிறான். மற்றவள் சகோதரி என்று தெரிந்து கொள்கிறாள்.

பெரிய கூடத்தில் சோபா செட்டுகள் இருக்கின்றன. சீனிவாசனையே அச்சாகக் கொண்ட இரண்டு சிறுவர்கள் நீண்ட பைஜாமா சட்டைகளுடன் புதிய விருந்தாளிக்காக உடை உடுத்துக் கொண்டாற்போல் விளங்குகின்றனர். “சுரேஷ், நரேஷ்...” என்று பெயர் சொல்லுகின்றனர்.

“உட்காருங்கம்மா!” என்று சீனிவாசன் அங்கவஸ்திரத்தை கையிலெடுத்துக் கொண்டு பரபரப்பாக சகோதரியுடன் உள்ளே செல்கிறான்.

எதிரே லோகாவின் கணவர் மொட்டைத் தலைதான் புன்னகை செய்கிறது. “லோகா ரொம்ப பிஸியா இருக்கா. அதனால இன்னிக்கு இங்கே வரமுடியலே. நீங்க போங்கோன்னா ...”

டெரிலின் சட்டை, வயிர மோதிரம், தூய வெள்ளை சலவை மடிப்பு வேட்டி...

மைத்ரேயிக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. ஒரு கணம் தான் எதற்காக அங்கு வந்திருக்கிறாள் என்பது புரியாதவள் போல் சுற்றும் முற்றும் பார்க்கிறாள்.

வாயிலிலிருந்து இருவர் வருகின்றனர். வெற்றிலை புகையிலை வாயும் மூக்குக் கண்ணாடியும் கதர் சால்வையுமாக ஒரு பெரியவர்; கஞ்சி விரைப்பு கதர் சட்டையோடு கூடிய இளைஞன்.

லோகாவின் கணவர் எழுந்து கைகுவித்து வரவேற்றார்.

“இவதான் புரொபஸர் வேதாந்தம். வால்மீகி ராமாயணத்தில் அதாரிட்டி. நீ இவா லெக்சரெல்லாம் கேட்டி ருப்பியே?” | “மைத்ரேயி. இன்னிக்குப் பேசறா... “உங்களுடைய புத்தகம் ஒண்ணு படிச்சிருக்கேன். இந்து சமயம் பற்றியது. நேரில் பார்த்தது ரொம்ப சந்தோஷம்” என்று மைத்ரேயி கைகுவிக்கிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/291&oldid=1101357" இலிருந்து மீள்விக்கப்பட்டது