பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

299

உடுத்திக்கொண்டு எட்டிப் பார்க்கிறாள். “இதுதான் என் சமசாரம். இந்தக் குழந்தைக்கு அண்ணா மைவிழின்னு பேர் வச்சார் நான் ‘மைத்தி'ன்னுதான் கூப்பிடுகிறேன்...” என்று கண்களைச் சிமிட்டுகிறாள். அவளுக்குக் கனவிலேயே சொறேலென்று அடிவயிற்றில் பள்ளம் பறிப்பதுபோல் இருக்கிறது. “என்ன ஆனாலும் நீ பிராமணப் பொண்ணு. சாதிக்காரன்தான் உனக்குத்தோது. கிளி கூட்டவிட்டுப் பறந்து போயிட்டுதுன்னு அம்மணி சொல்லிச்சு. கூட்டத் திறந்துவுட்டது அதுதான் தெரியும். நான் எங்க சாதியிலேயே கட்டிக் கிட்டேன்...”

உடனே அவளுக்கு முரளியின் நினைவு தோன்றுகிறது. உடல் வியர்க்க விழித்துக் கொள்கிறாள். பிறகு அவள் உறங்க வில்லை.

விடியற் காலையில் நான்கு மணியாகுமுன்பு அவள் எழுந்து சென்று முகம் கழுவிக் கொண்டு வருகிறாள். ஞானத்தின் அறையில் விளக்கு எரிவது தெரிகிறது. கதவைத் தட்டாமலே எட்டிப் பார்க்கிறாள்

“வா வா, முழிச்சிட்டுத்தான் படுத்திருக்கிறேன்.....”

மைத்ரேயி உள்ளே நுழைந்து கட்டில் விளிம்பில் அமர்ந்து கொள்கிறாள்.

“தலைவலி எப்படி இருக்கக்கா ? விளக்குப் போட்டிருக்கவே எதோ படிக்கிறீர்கள், இல்லை எழுதுகிறீர்கள்ன்னு நினைச்சேன்...”

அவளுடைய அமைதி குலைந்த நெஞ்சை ஊடுருவிப் பார்ப்பது போல் பார்க்கிறாள் ஞானம். “நீ தூங்கவே இல்லை போலிருக்கிறதே?”

“என்னை ரொம்ப மன்னிச்சுக்குங்க ஸிஸ்டர், எனக்குத் தலைக்கணம் ரொம்ப அதிகமாப் போயிடுத்து.”

மைத்ரேயி கண்களைத் துடைத்துக் கொள்கிறாள் குனிந்து. என்றாலும் துயரம் விள்ளத்தெரியாமல் கனக்கிறது.

“ரொம்பத் தைரியமான பெண்...யாரேனும் இப்போது பார்த்தால் சிரிப்பார்கள். அசடு, என்ன இதெல்லாம் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/301&oldid=1101374" இலிருந்து மீள்விக்கப்பட்டது