பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300

ரோஜா இதழ்கள்

“எனக்கு ஏன் இப்படி இருக்கேன்னு தெரியல ஸிஸ்டர். ஒருதரம் தப்புச் செய்ததற்கு மேலே மேலே நான் போய்க் கொண்டே இருக்கிறேன். உங்களுக்கு நான் பேச ஒப்புக் கொண்டது பிடிக்கலேன்னு தெரிஞ்சும் இப்படி வெறும் புகழ்ச்சிக்குக் கண்மூடிப் போனது தப்பு...”

“கெட்டிக்காரத்தனம் சொட்டுகிறது. நீ பேச ஒப்புக் கொள்வது எனக்குப் பிடிக்கலேன்னு சொன்னேனா? ஏணிப்படி அசடுபோல் கற்பனை செய்து கொண்டு சங்கடப் படுகிறாய், உன் சுதந்திரத்தில் குறுக்கிட நான் யார்?”

“நீங்களாகப் பார்த்து ‘மைத்ரேயி, நீ இப்படிச் செய் அதைச் செய்யாதே’ என்று உத்தரவு போடுங்கள். நான் சந்தோஷமாக இருப்பேன். ஐ ஆம் அட் க்ராஸ் ரோட்ஸ், லிஸ்டர்(I am at cross roads, sister) நேத்து நீங்க அங்கே என்ன நடந்ததுன்னு கேட்டீங்களா ?”

“என்ன நடந்தது? கூட்டம் அதிகமா ?“

“எனக்கு ஒன்றே ஒன்றைத் தவிர மனசில் வேறொன்றும் பதியவில்லை. பூமாலைக் குவியலில் பளிச்சென்று கறுப்பு சிவப்புத் தான் தெரிந்தது....”

“அட? மாலையிலேயே கூட்டா ?”

“நீங்க புரிஞ்சுக்கலே ? நான் எதிர்பாராத விதமாக கூட்டம் முடியும்முன்ன தனராஜ் வந்தான். அவன் கொஞ்சம் கூடக் கூசவோ, தெரிந்தாற்போல் காட்டிக் கொள்ளவோ இல்லை, எனக்கு என்னமோ போலாயிட்டது...”

ஞானம் உத்தரத்தைப் பார்த்துக் கொண்டு சிரிக்கிறாள். “அரசியல் என்றால் மென்மையான உணர்ச்சிகளுக்கு அங்கே இடமேயில்லை என்றாகிவிட்டது. அவன் கூசவில்லையானால் உனக்கும் பிரச்சனை இல்லையே? இதில் என்ன சங்கடம் ?”

“நான் இனிமேல் எங்கும் போகப் போவதில்லை. ஆமாம் நான் படித்து கிளாஸ் வாங்கி, ஏதேனும் வேலையில் சேர்ந்து, கஷ்டப்படுபவர்களுக்கு உதவும்படி வாழவேணும். அதைவிட்டு, பிண்ணாக்கு வாசனைக்குத் தடம் புரளும் மாட்டைப்போல் நான் ஏன் போகணும் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/302&oldid=1101376" இலிருந்து மீள்விக்கப்பட்டது