பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

301

"ரொம்ப சரி. இனிமேல் யார் வந்தாலும் மைத்ரேயி வாமாட்டாளென்று விரட்டியடிக்கிறேன்...”

மைத்ரேயிக்குப் பெரிய பளுவை இறக்கி வைத்தாற் போலிருக்கிறது.

நாட்கள் நூல் பிடித்த ஒழுங்கில் அவளைக் கொண்டு செல்கின்றன. திருவிழாக் காட்சிகளில், கத்திக்குத்துச் சச்சரவுகளில், கட்சிப் பூசல்களில் புதிய சுலோகங்களில் கருத்து இழுபட்டாலும் ஒட்டாமல் இலங்குகிறாள். சீனிவாசன் தன் தொகுதியில் நிற்கிறான். சுவரொட்டிகள் வகை வகையான வண்ணங்களாய்த் தென்படும் இடங்களிலெல்லாம் மனதை அப்பிக்கொள்ளப் போட்டியிடுகின்றன. தென்படும் முகங்களும் செவியில் விழும் பேச்சொலிகளும் ஒருமனதாகக் குவித்து வருபவைபோல் பிரமையாக இருக்கிறது.

“பதினேழு வருஷம் ஆண்டு உருப்படாம அடிச்சதுதான் மிச்சம். இவனுக செய்து காட்டுவேன்றானுகள், பார்ப்பமே? என்ன ஆழகாய்த் தமிழ் பேசுறானுக!”

“ஆமாம். சுவாமிகள் படத்தை வச்சிண்டு செருப்பு மாலை போட்டு ஊர்கோலம் நடத்தினானாமே? ஒரு மந்திரி அதுக்கு வாயைத் திறந்தானா? இவங்க ராஜ்யம் கவுந்துடும். விநாசகாலே விபரீதபுத்தி!”

“பழைய தஞ்சாவூர்ச் சுவடிலே இருக்காம்! மிலேச்சன் போன பிறகு பதினேழு வருஷம்தான் சுயராஜ்யக் கட்சிக் காரா ராஜ்யத்தை ஆளுவா. அதுக்கப்புறம் உதயசூரியனின் சின்னம் கொண்டவாதான் ராஜ்யத்தை ஆள வருவான்னு இருக்காம். நாம காயத்திரி மந்திரம் சொல்றோம். உதய சூரியனை அவா சின்னமா வச்சிண்டிருக்கான்னு பெரியவரே சொல்லியிருக்காரே?” கோயில் வாசலில் அன்றாடம் தங்கள் பிழைப்புக்காக வந்து கும்பல் ஒன்று பேசிக்கொள்வதை மைத்ரேயி கேட்டும் கேளாமலும் கடந்து செல்கிறாள். அரிசியைக் குவித்துச் சில்லறை வியாபாரம் செய்யும் சந்தை.

“ஏம்ப்பா, அரிசி என்ன விலை... ?”

“ஒண்ணு அறுபது, சாப்பாட்டரிசிம்மா..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/303&oldid=1101378" இலிருந்து மீள்விக்கப்பட்டது