பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

303

"நான் இப்போது உங்களை விருப்பத்துக்கு விரோதமாக கட்டாயப்படுத்தப் போறதில்லே. நானே நிற்கிறதாக முடிவாயாச்சு. இனி என்ன உங்களுக்கு? அன்னிக்குப் பத்திரிகை பேட்டி வேண்டான்னு காரமாகச் சொன்னேள். ஒப்புக் கொண்டேன். ஆனா உங்க பேச்சு எப்படி எல்லாரையும் இம்ப்ரஸ் பண்ணி இருக்குங்கறது உங்களுக்கே தெரியாது. நான் அதைப் பத்தி எல்லாம் இப்ப பேசப் போறதில்ல. உங்கத்திம்பேர் காரில் உட்கார்ந்திருக்கார். உங்களைப் பார்க்கணும்னு மூணு நாள் அவரைக் கூட்டிண்டுப் போயிருக்கிறேன். அந்தம்மா என்ன அவ்வளவு மோசமா இருக்கா? நீங்க, என்ன, அவ அடிமையா?”

அம்மைவடுமுகம் சிவக்கிறது.

மைத்ரேயி ஒருகணம் அதிர்ச்சியுற்றாற்போல் நிற்கிறாள்.

அத்திம்பேர்...அத்திம்பேரா?

மனசு கூவுகிறது.

“இதோ வரார் பாருங்க...”

ஆம். அந்தக் கடைத்தெருக் கூட்டத்திடையே அவள் அவரைப் பார்க்கிறாள். எத்தனை வருஷங்களாகிவிட்டன.

முன்முடி நன்றாக மறைந்து வழுக்கையாகியிருக்கிறது. அதே நடுங்கல் உடம்பு. மழுமழுத்த முகம், ஒட்டாத சட்டை , வேட்டி, முகமலர்ந்து சிரிக்கிறார். அவளால் கற்பனைகூடச் செய்து பார்க்க இயன்றிராத காட்சி. “சௌக்கியமாம்மா மைத்ரேயி? அத்திம்பேரைத் தெரியறதா?” என்று கேட்கிறார்.

அவரால் எப்படிக் கேட்க முடிகிறது?

அவள் கண்களை நீர் படலம் மறைக்கிறது. அன்று அவளைப் படி ஏறாமல் தற்கொலை செய்துகொள்வதை ஆதரித்தவர்; கண்காட்சி மைதானத்தில் அவள் பக்கம் திரும்பினாலே அபவாதம் ஒட்டிவிடும் என்று சென்றவர்...

இன்று அவள்மீதுள்ள களங்கம் அகன்றுவிட்டதா? ஏ, உயர்குலமே? நீ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/305&oldid=1101384" இலிருந்து மீள்விக்கப்பட்டது