பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

ரோஜா இதழ்கள்

அந்தச் சிதைவில்தான் நசுக்குண்டு அவள் கண்ணிரைக் கக்குகிறாள்.

“வைத்தியநாதன், மைத்ரேயின்னு சொன்னபோதே எனக்குச் சந்தேகமாக இருந்தது. நம்மூர் வெங்கிட்டு வேறு அன்னிக்குத் திருச்சின்னபுரம் மீட்டிங்கில் பார்த்துவிட்டு வந்து நீதான்னு சொன்னான். உங்கக்கா என்னைப் பிடுங்கி எடுத்துட்டா. நானும் இவங்ககூட வந்து மூணு நாளா அலையறேன். அந்தம்மா படி ஏறாதீங்கோன்னு சொல்றாப் போல அவ இல்லேன்னு கதவை சாத்தினா...”

“அப்படியா? இருக்காதே? நீங்க என்னிக்கு வந்திருந்தீர்கள் ?”

“முந்தாநாள் காலமே, நேத்துப் பகல், இத இப்ப அங்கே வீட்டில் பார்த்துவிட்டு வரோம். மீட்டிங்குக்கெல்லாம் அவ வரமாட்டான்னா. அதில்ல எங்க பெண் அவ, தவியாத் தவிச்சுத் தேடி வந்திருக்கிறோம்னு சொல்றேன். அவ இருக்கும்போது வாங்கோன்னு முடிச்சுட்டா. அவ இருக்கும் போதுன்னா, எப்ப இருப்பான்னா பதில் கிடையாது.”

“அத்திம்பேர், உங்களுக்கு விஷயம் தெரியாது. அவர் எனக்கு எல்லாம். நீங்கள் இப்போது வாருங்கள். வீட்டில் போய்ப் பேசலாம்.”

வண்டியில் அவள் ஏறி அமருகிறாள். ஒருமைல் தொலைவுக்குள் உள்ள காலணியை நோக்கி வண்டி விரைகிறது. மைத்ரேயி கணநேர நெகிழ்ச்சியின் விளைவில் பழைய இடிபாடுகளை ஒதுக்கிவிட்டுப் புதிய மாளிகையைச் சமைக் கிறாள்.

‘இரத்தத் தொடர்பு’ என்பது இதுதானா? அக்கா...! அந்த வீட்டுக்குச் செல்லவேண்டும் என்று மனம் ஏன் கட்டுக் கடங்காமல் குதிக்கிறது. அந்த மாடிக்கூடம்,ஊஞ்சல், மாமரங்கள், இரைவைக் கிணறு... எத்தனை வருஷங்களான பின் இந்த நெகிழ்ச்சி! கார் வீட்டின் முன் வந்து நிற்கையில் வீடு பூட்டி இருப்பதைப் பார்க்கிறாள் மைத்ரேயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/306&oldid=1100175" இலிருந்து மீள்விக்கப்பட்டது